மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கு இப்போதே நான் தயார்: அஜீத் பவார்!
முதல்வர் பதவிக்காக 2024 சட்டப்பேரவைத் தேர்தல் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இப்போதே அதை ஏற்கத் தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் தெரிவித்தார்.
கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவாரின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பது பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவி வரும் நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர் 100 சதவீதம் மகாராஷ்டிர முதல்வராக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக புனேயில் ஊடகத்துக்கு பேட்டியளித்த அஜித் பவார், சிவசேனை தலைவருக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஷிண்டே போர்க்கொடி தூக்குவதற்கு முன்பாகவே சிவசேனை கட்சியில் ஏதோ விபரீதமாக நடக்கப்போகிறது என்பது தமக்கு தெரியவந்த்தாக குறிப்பிட்டார்.
2004 ஆம் ஆண் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியைவிட அதிக இடங்களில் வென்றபோது எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆர்.ஆர்.பாட்டீல்தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால், தில்லியிலிருந்து வந்த தகவல் எங்கள் கட்சிக்கு
துணை முதல்வர் பதவிதான் என்று கூறிவிட்டதாக பவார் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை கேட்டுப் பெறுமா என்று கேட்டதற்கு, ஏன் 2024 வரை காத்திருக்க வேண்டும். இப்போதே நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்ட அஜீத் பவார், மேலும் அதை விவரிக்க மறுத்துவிட்டார்.
மும்பையில் நடைபெற்ற தேசியவாத கட்சிக் கூட்டத்தில் அஜீத் பவார் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு வதந்திகளை ஏற்படுத்தியுள்ளது. தமக்கு அந்த நேரத்தில் வேறு முக்கிய வேலைகள் இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் பதவி மீது உங்களுக்கு விருப்பமா என்று கேட்டதற்கு, ஆமாம்… 100 சதவீதம் அதற்கு நான் ஆசைப்படுகிறேன்.
2004 ஆம் ஆண்டு தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 71 இடங்களில் வென்றது. ஆனால் காங்கிரஸ் 69 இடங்களை மட்டுமே பிடித்தது. அப்போது எல்லோரும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குத்தான் முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், தில்லியிலிருந்து வந்த நிர்பந்தம் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்த்து. பல சந்தர்ப்பங்களிலும் எங்களுக்கு துணை முதல்வர் பதவிதான் கிடைத்தது என்றார் பவார்.
காங்கிரஸ் முதல்வர் பிருதிவிராஜ் சவான் அல்லது கடந்த நவம்பர் 2019 முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் பணி செய்வதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்ததா என்று கேட்டதற்கு, சிவசேனையுடன் நாங்கள் மகிழ்ச்சியாகத் தான் இருந்தோம். ஆனால், காங்கிரஸை நாங்கள் வேறு வழியில்லாமல் ஆதரிக்க வேண்டியிருந்தது என்றார்.
சிவசேனை கட்சியில் ஷிண்டே போர்க்கொடி உயர்த்துவதற்கு முன்னரே அக்கட்சியில் ஏதோ பிளவு வெடிக்கப்போகிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். இது தொடர்பாக சரத் பவாரிடமும், சிவசேனை முதல்வர் உத்தவ் தாக்கரேவிடமும் சூசகமாக தெரிவித்தேன். ஆனால், உத்தவ் தாக்கரே நான் கொடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கட்சியினரை நம்பினார். அதன் விளைவுதான் கட்சியில் ஏற்பட்ட பிளவு என்றார் அஜீத் பவார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸிடம் நீங்கள் சுமுகமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, எங்கள் இருவருக்கும் அரசியல் ரீதியில், கொள்கை ரீதியில் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாங்கள் விரோதிகள் அல்ல என்றார். சிவசேனை நிறுவனர் பால்தாக்கரேயும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக் கொண்டாலும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில வருடங்களாக பா.ஜ.க. பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளதே என்று கேட்டதற்கு, அடல் பிகாரி வாஜபேயி மற்றும் எல்.கே.அத்வானியால் சாதிக்க முடியாததை நரேந்திர மோடி சாதித்துவிட்டார். 2014 மற்றும் 2019 தேர்தல்களில் வென்று மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றுவிட்டார் பிரதமர் மோடி என்று அஜீத் பவார் குறிப்பிட்டார்.