எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அதற்கு மோடி அரசுதான் காரணம் - முன்னாள் ஆளுநரின் அதிரடி ஸ்டேட்மெண்ட்!

எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், அதற்கு மோடி அரசுதான் காரணம் - முன்னாள் ஆளுநரின் அதிரடி ஸ்டேட்மெண்ட்!

இசட் பிளஸ் செக்யூரிட்டியை வாபஸ் பெற்றுவிட்டார்கள். ஒரே ஒருவரை மட்டும் பாதுகாப்பாக நியமித்திருந்தார்கள். அவரையும் மூன்று நாட்களாக வீட்டுப்பக்கம் வரவில்லை. எனக்கு ஏதாவது நடந்துவிட்டால், அதற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க அரசுதான் பொறுப்பு என்று புலம்பியிருக்கிறார், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்

என்னதான் நடந்தது? 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, ஜம்மு காஷ்மீர் பிரச்னையை கையிலெடுத்துக்கொண்டது. 2019 ஆரம்பத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்த மோடி அரசு, இறுதிக்கட்டமாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தான அரசியலமைப்புப் பிரிவு 370-ஐ நீக்கியது. கூட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் இரண்டாக பிரித்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துவிட்டது.

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை கட்டுக்குள் கொண்டு வந்து அமைதி திரும்பவதற்காக நிர்வாக ரீதியாக யூனியன் பிரதேசங்களாக பிரித்தது பின்னாளில் விளக்கமும் தரப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது, ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். மத்திய பா.ஜ.க அரசுக்கு அப்போது முழுமையாக ஒத்துழைப்பை தந்தவர்.

பின்னாளில் காட்சி மாறிவிட்டது. அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிய ஆளுநரை, மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அதற்கு ஆதரவாக சில கருத்துக்களை சத்யபால் மாலிக் பேசியிருந்தார். மத்திய அரசின் குரலாக ஒலிக்க வேண்டிய மாநில ஆளுநர், வேறு குரலில் ஒலிக்க ஆரம்பித்தது டெல்லியை கோபப்படுத்தியது.

அடுத்து ஊழல் குற்றச்சாட்டிலும் சத்யபால் மாலிக் சிக்கிக் கொண்டார். இரண்டு முக்கியமான கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட கோப்பில் கையெழுத்திட 300 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பான சி.பி.ஐ வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது.

இதில் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ், ரிடினிட் புரோக்கர் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களிடமிருந்து விதிகளை மீறிய டெண்டர்கள் பெறப்பட்டதாகவும் சி.பி.ஐ தன்னுடைய முதல் கட்ட விசாரணையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்நது தெரிவித்து வருகிறார்.

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் ஆளுநர்கள் அனைவருக்குமே நல்ல பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், ஏனோ எனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. என்னுடைய பாதுகாப்பிற்காக நியமித்த செக்யூரிட்டி ஆபிஸரும் மூன்று நாட்களாக வந்து சேர்வில்லை. யார் வேண்டுமானாலும் என்னை தாக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் எனக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுதான் பொறுப்பு என்கிறார்.

மாநில அளவில் ஆளுநர் - முதல்வர் மோதல், பல மாநிலங்களில் தொடர்ந்து நீடிக்கிறது. கூடவே முன்னாள் ஆளுநர்களும் மோதலில் இறங்குவதும், அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு அதிரடி ஸ்டேட்மெண்ட் விடுவதும் வேடிக்கைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com