ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு எல்.பி.ஜி. சிலிண்டர்: காங்கிரஸ் உறுதி!
மத்திய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்.பி.ஜி.) விலையை கடுமையாக உயர்த்தியுள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 –ம், வர்த்தக உபயோகத்துக்கான சிலிண்டர் விலையை ரூ.350 உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு, மேலும் திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலாந்து தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இதற்கான உத்தரவு வெளிவந்துள்ளது. தில்லியில் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.1,053 –லிருந்து ரூ.1,103 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ.1,068.50 காசுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பணவீக்கம் மற்றும் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையை ரூ.50-ம் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.350 –ம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடி அரசும் எண்ணெய் நிறுவனங்களும் இன்னும் எத்தனை நாளுக்கு விலைகளை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கப்போகிறது? விலைவாசி உயர்வால் மக்கள் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்று டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் கெளரவ் வல்லப் கூறுகையில், எல்.பி.ஜி. விலை உயர்வுதான் மோடி மக்களுக்கு அளித்துள்ள ஹோலி பரிசாகும். மோடி அரசின் பகல் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும்.
2024 பொதுத்தேர்தலில் வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். வரிகளை உயர்த்திக் கொண்டே போய் மக்களை காங்கிரஸ் சூறையாடாது என்று தெரிவித்துள்ளார்.
எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வு மறைமுகமாக இதர பொருள்களின் விலை உயர்வுக்கும் வழி வகுக்கும். மீண்டும் சிலிண்டர் விலையை மோடி அரசு உயர்த்தியுள்ளது. அதுவும் ஹோலி பண்டிகை நேரத்தில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயாளர்களில் ஒருவரான பிரியங்கா வாத்ரா தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டிலிருந்து சிலிண்டர் விலை 275 சதவீதம் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.400 ஆக இருந்தது. ராஜஸ்தான் அரசு ரூ.500-க்கு வீட்டு உபயோக சிலிண்டர்களை வழங்கி வருகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றார் பிரியங்கா வாத்ரா.
வீட்டு உபயோகத்துக்கான எல்.பி.ஜி. சிலிண்டர்களுக்கு அரசு மானியம் ஏதும் வழங்குவதில்லை. பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு பெற்ற 9.58 கோடி ஏழை மக்களுக்கு மட்டும் ரூ.200 மானியமாக அரசு வழங்கி வருகிறது. அவர்களுக்கு ரூ.903 விலையில் சிலிண்டர்கள் விற்கப்படுகின்றன.