ஓரணியில் திரண்டால் பா.ஜ.க.வை 100% வீழ்த்த முடியும்: இத்தாலிய நாளிதழுக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டி!

ஓரணியில் திரண்டால் பா.ஜ.க.வை 100% வீழ்த்த முடியும்: இத்தாலிய நாளிதழுக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டி!

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று ராகுல் காந்தி எம்.பி. உறுதிபட தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி, அண்மையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் முயற்சியாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,750 கி.மீ. ஒற்றுமை யாத்திரை நடத்தினார்.

அவரின் இந்த எழுச்சிப் பயணத்துக்கு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், திரையுலக பிரமுகர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ராகுல் காந்தியும் அவ்வப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக கூறிவந்தார்.

இந்த நிலையில் இத்தாலிய தினசரி பத்திரிகையான “காரியர் டெல்லா சேரா”வுக்கு அவர் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில்

பல்வேறு சுவாரஸ்மான கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், “திருமணம் செய்துகொள்ள ஆசைதான். ஆனால், இதுவரை ஏன் நடக்கவில்லை என்பது எனக்கு புரியாத புதிராக உள்ளது. நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். குழந்தைகள் மீது ஆசை. எனவே குழந்தைகளும் பெற்றுக்கொள்வேன். பல காரியங்களை நான் செய்ய வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

52 வயதான ராகுல் மேலும் கூறுகையில், “ எனக்கு இந்திராகாந்தி பாட்டியைத்தான் பிடிக்கும். ஆனால், எனது சகோதரிக்கு இத்தாலிய பாட்டியான பாவ்லா மைனோ மீதுதான் அதிகம் பிரியம். (கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாவ்லா மைனோ இறந்துவிட்டார்.).

நீங்கள் ஏன் தாடி வளர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ஒற்றுமை யாத்திரை பயணத்தின்போது தாடி வளர்க்க ஆரம்பித்தேன். அது இப்போது நீண்டு வளர்ந்துவிட்டது. மார்ச் மாதம் வரை தாடியை எடுப்பதில்லை என்று தீர்மானித்துள்ளேன். தாடியை தொடர்ந்து வைத்திருப்பதா அல்லது எடுத்துவிடுவதா என்பது பற்றி நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

நாட்டை காப்பாற்ற நாங்கள் ஓர் இயக்கமாக செயல்படுகிறோம். ஆனால், இதை சிலர் குடும்ப அரசியல் என்கிறார்கள். எங்களுக்கு உயிரைவிட நாடு முக்கியமானது. எனது தந்தையும், பாட்டியும் நாட்டிற்காக உயிரை இழந்தார்கள். அதுபோல நாட்டுக்காக உயிரைவிடவும் தயார். எனது தயார் சோனியா, இத்தாலியில் பிறந்திருந்திருந்தாலும் தனது வாழ்க்கையை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்து வருகிறார். இறக்கும்வரை அவரது செயல் தொடரும்.

நாட்டில் பாசிஸம் (சர்வாதிகாரம்) தலைதூக்கி வருகிறது. ஜனநாயக கட்டமைப்புகள் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றம் முறையாகச் செயல்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னால் நாடாளுமன்றத்தில் பேசமுடியவில்லை. நான் பேச எழுந்தால் மைக்குகள் அணைக்கப்படுகின்றன. அதிகாரச் சமநிலை இல்லை. நீதியும் சுதந்திரமாக இல்லை. பத்திரிகைகளும் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. எதையும் வெளிப்படையாக பேசமுடியவில்லை. தவறான வழியில் பணம் சேர்ப்பதில் குறியாக இருக்கிறார்கள். மொத்தத்தில் மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

பாசிஸத்தை ஒழிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்துவது 100 சதவீதம் சாத்தியமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் தோற்கடிக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டால் நிச்சயம் அது நடக்கும். பிரதமர் மோடி தோல்வி அடைவது உறுதி என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவரை தோற்கடிக்க முடியும் என்றுதான் சொல்கிறேன்.

நாட்டிற்கு தேவை அமைதியும், ஒற்றுமையும். வலது, இடது சித்தாந்தத்தை, அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் சிந்தாந்தத்தை முறியடிக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும்.

உக்ரைன் – ரஷியா போரைப் பற்றி நான் ஏதும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அது வெளியுறவுக் கொள்கை சார்ந்தது. ஆனால், அமைதியின் வழியில் தீர்வுகாண்பது அவசியம் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com