”அதானியை ஒழிக்க வேண்டுமானால் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்” - காங்கிரஸ் தலைவர் பேச்சால் சர்ச்சை!

”அதானியை ஒழிக்க வேண்டுமானால் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்” - காங்கிரஸ் தலைவர் பேச்சால் சர்ச்சை!

அதானி போன்ற முதலைகளிடமிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமானால், முதலில் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பேசி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்விந்த சிங் ரந்தாவா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் கூட்டத்தில் ரந்தாவா பேசியதாவது:

தொழிலதிபர் அதானி போன்றவர்களிடமிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமானால், முதலில் மோடியை ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

அதானி முறைகேடுகள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. இதற்கு செவிசாய்ப்பதாக இல்லை.

மோடி நாட்டை சீர்குலைத்து வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விற்று வருகின்றனர். நாம் அதானியை எதிர்த்து போராடுவதைவிட பா.ஜ.க.வை எதிர்த்துதான் போராட வேண்டும். அதானியை ஒழிக்க வேண்டுமானால் மோடியை முதலில் ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.

பிரதமர் மோடி, கிழக்கிந்திய கம்பெனியை அதானி ரூபத்தில் கொண்டுவந்துள்ளார். இன்று அரசின் கொள்கைகள் முடிவுகள் என்ன என்பதை அதானி போன்ற தொழிலதிபர்கள் முடிவு செய்கிறார்களே தவிர பிரதமர் முடிவு செய்வதில்லை.

2019 ஆம் ஆண்டில் நடந்த புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலில் ஜவான்கள் உயிரிழந்தது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இது நடந்துள்ளது. இதில் 40 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தேர்தல் கண்ணோட்டத்தில் மோடியே இதற்கு ஏற்பாடு செய்தாரா? என்பது தெரியவில்லை. எனினும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

தங்களைவிட தேசபக்தர்கள் யாரும் இல்லை என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர். சுதந்திரம் பெறுவதற்காக நடந்த விடுதலை போராட்டத்தில் எந்த பா.ஜ.க. தலைவர் பங்கேற்றார் என்று ரந்தாவா கேள்வி எழுப்பினார்.

சமீபகாலமாக முதல்வர் அசோக் கெலாட் கோஷ்டியினருக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கோஷ்டியினருக்கும் மோதல்கள் நீடித்து வருகிறது. அவை பத்திரிகைகளில் செய்திகளாகவும் வெளிவருகின்றன. அனைத்து தலைவர்களும் கோஷ்டிப்பூசலை மறந்து ஒன்றாக செயல்பட்டு மோடியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரந்தாவா.

முன்னதாக ஜெய்ப்பூரில் பல்வேறு இடங்களில் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com