செப்டம்பர் முதல்வாரத்தில் மும்பையில் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்

‘இந்தியா’ கூட்டணி
‘இந்தியா’ கூட்டணி

எதிர்க்கட்சி கூட்டணியான இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி “இந்தியா”வின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது செப்டம்ர் முதல்வாரத்தில் நடைபெறும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்தார்.

26 அரசியல் கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முந்தைய கூட்டம் கடந்த ஜூலை 17, 18 தேதிகளில் பெங்களூருவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்த பின் காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியதாவது: இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தை செப்டம்பர் முதல்வாரத்தில் வைத்துக் கொள்ளலாம் என காங்கிரஸ் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான தேதிகள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது இதுவே முதல் முறையாகும்.

முதல் ஆலோசனைக் கூட்டம் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது.

மும்பையில் நடைபெறும் கூட்டத்தை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்   பொறுப்பேற்று நடத்துகின்றன.

பெங்களூருவில் 26 கட்சிகள் பங்கேற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் முடிவுற்ற நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி கூட்டணியின் அமைப்பாளரை தேர்வுசெய்ய 11 பேர் அடங்கிய உறுப்பினர்கல் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு நிறுவப்படும். அந்த குழு கலந்து பேசி அமைப்பாளரை தேர்வு செய்யும். இதற்கான கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று கார்கே தெரிவித்திருந்தார்.

தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க தில்லியில் பொதுவான தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என்றும் கார்கே கூறியிருந்தார்.

மாநில அளவில் கட்சிகளுக்கு இடையே கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மக்கள் நலன் கருதி இவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் கார்கே கூறியிருந்தார்.

பெங்களூரு நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் 26 அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் எதிர்கொள்ள பொதுவான உத்திகளை வகுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

-----------

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com