மாநிலங்களவையில் சுவாரசிய கதை நேரம்!

மாநிலங்களவையில் சுவாரசிய கதை நேரம்!

மெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது சமீபத்தில் பல புகார்களை வைத்துள்ளது. இந்தப் புகார் குறித்த சர்ச்சைகள் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இன்று நாடாளுமன்றம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோஷத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் சற்று நேரம் முடங்கின.

சிறிது நேரத்தில் மீண்டும் கூடிய மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா ஒரு கதையைக் கூறி பாஜகவை விமர்சனம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்தக் கதையில் அவர், ‘‘ஒரு கல்லூரி ஹாஸ்டலில் தினமும் உப்புமா போடுவதைக் கண்டித்து மாணவர்கள் அனைவரும் வார்டனிடம் சென்று முறையிடுகிறார்கள். அதைக் கேட்ட வார்டன், ‘சரி உங்களுக்கு என்ன உணவு வேண்டும் என்பதற்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். உங்களுக்குப் பிடித்தமான உணவை நீங்கள் குறிப்பிடுங்கள். எதை அதிகம் பேர் விரும்புகிறார்களோ அதைக் கொடுக்க நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறுகிறார்.

அந்த வாக்கெடுப்பில் ஏழு சதவிகித மாணவர்கள் பிரெட் ஆம்லெட்க்கு வாக்களிக்கிறார்கள். 13 சதவிகித மாணவர்கள் பூரி வேண்டும் என்றும், 18 சதவிகித மாணவர்கள் பரோட்டா வேண்டும் என்றும், 19 சதவிகித மாணவர்கள் மசாலா தோசை தேவை எனவும், 20 சதவிகிதம் பேர் இட்லி வேண்டுமெனவும், 23 சதவிகித மாணவர்கள் மீண்டும் உப்புமாவே வேண்டும் என வாக்களிப்பில் கோருகிறார்கள். இதனால் உப்புமாவே மீண்டும் அந்த வாக்களிப்பில் வெற்றி பெறுவதால் ஹாஸ்டலில் மறுபடியும் உப்புமாவே போடப்படுகிறது’’ என்று திருச்சி சிவா அந்தக் கதையைக் கூறியதோடு, ‘‘அதைப்போலத்தான் 2019ல் நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்றது. மாணவர்களிடையே ஒற்றுமை இல்லாததால் உப்புமா வெற்றி பெற்றதைப் போல், எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததால் பாஜக வெற்றி பெற்றது’ என்று கூறி கதையை முடித்தார்.

திருச்சி சிவா கூறிய இந்த உப்புமா கதையை சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த அவை உறுப்பினர், இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்று நினைத்திருந்தபோது அவர், ‘அடுத்த தேர்தலில் அது நடக்காது. எதிர்க்கட்சிகள் ஒன்று இணைய வேண்டும் என்று எங்கள் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகிறார். மாநில உரிமைகளை இவர்கள் குழி தோண்டி புதைத்துவிட்டனர். இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது. இதோடு இந்த ஆட்சிக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து முடிவு கட்டும்’ என்று பேசினார். இந்த உப்புமா கதை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com