தமிழகத்தில் உள்ள சௌராஷ்டிரா வாக்குகளை பெறும் முயற்சியா மத்திய அரசின் செங்கோல் யுக்தி?
செங்கோல் சர்ச்சையும், சோழர்களின் பண்பாட்டு நீட்சியாக பா.ஜ.க முன்வைக்கும் விஷங்களும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக அரசியல் சர்ச்சையாகியிருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திற்கு சௌராஷ்டிரர்கள் வந்து சேர்ந்த வரலாற்று பின்னணியும் இணையத்தில் விவாதமாகியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் போல், கடந்த மாதம் குஜராத்தில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து வரும் சில மாதங்களில் கேதார்நாத் தமிழ் சங்கமம் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள இடங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை மையப்படுத்தி பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்துடன் இணைப்பதற்கான முயற்சிகளாக இத்தகைய கலாச்சார நிகழ்வுகள் பார்க்கப்பட்டு வரும் நிலையில் சௌராஷ்டிரார்கள் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தமைக்கு 11ஆம் நூற்றாண்டில் நடந்த இஸ்லாமியப் படையெடுப்புதான் காரணம். தங்களது அடையாளத்தையும் நம்பிக்கையையும் பாதுகாக்கும் விதமாக சௌராஷ்டிரர்கள் தமிழகத்தில் குடியேறினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.
சோம்நாத் கோயில் முதல் முறையாக அந்நிய நாட்டவரால் தாக்கப்பட்டபோது, அது நாட்டின் கலாச்சாரத்திற்கும் கௌரவத்திற்கும் விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்பட்டது. அதன் காரணமாகவே சௌராஷ்டிரர்கள் குஜராத்திலிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்கள் என்று பிரதமர் மோடி பேசியதன் பின்னணியில் வரலாற்றுக் குறிப்புகள் இருக்கிறதா என்பது பற்றிய விவாதங்கள் இணையத்தில் நடந்து வருகின்றன.
குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியிலிருந்து தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களில் செட்டிலானவர்கள் உண்டு. விஜயநகரப் பேரரசு காலத்தில் படிப்படியாக புலம் பெயர்தல் நடந்ததாக கல்வெட்டியல் ஆய்வாளர் வி. சுப்பராயலு தெரிவிக்கிறார். சௌராஷ்டிர மொழி பேசி தமிழகத்திற்கு வந்துவர்கள் உண்டு. ஆனால், அவர்கள் அனைவரும் சோம்நாத் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று நிறுவுவதற்கு ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் சௌராஷ்டிரா இனத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகள் உண்டு. ராமநாதபுர மாவட்டம் பரமக்குடி, திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களிலும் சௌராஷ்டிரா இனத்தைச் சேர்ந்தவர்கள் குடியேறியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து புலம்பெயர்ந்து வந்து தமிழகத்தில் தங்கிவிட்ட சிறுபான்மை குழுக்களை தேசிய அளவில் கௌரவப்படுத்தும் முயற்சிகளை பா.ஜ.க, சங்கமம் நிகழ்வுகளின் மூலமாக கையில் எடுத்திருக்கிறது. இது நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்க கைகொடுக்குமா? பார்க்கலாம்.