2024 தேர்தல் “இந்தியா”வுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிரான போட்டி: ராகுல்காந்தி

2024 தேர்தல் “இந்தியா”வுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிரான போட்டி: ராகுல்காந்தி

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையில் 26 அரசியல்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு “இந்தியா” என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா- இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்பதுதான் இதன் விரிவாக்கம். வரும் தேர்தல் இந்தியா கூட்டணிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான போட்டியாகத்தான் இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 2024 மக்களவைத் தேர்தல் நாங்கள் ஒற்றுபட்டு சந்திப்போம் அதில் வெற்றியும் பெறுவோம் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க 11 உறுப்பினர்கள் அடங்கிய குழு ஏற்படுத்தப்படும் என்றும் கூட்டணியின் அமைப்பாளர் யார் என்பது அடுத்து மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசாரம், பேரணி, மற்றும் பொதுக்கூட்டம் தொடர்பான விவகாரங்களை கவனிக்க தில்லியில் செயலகம் ஒன்று அமைக்கப்படும். மும்பை கூட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கார்கே தெரிவித்தார். புதிய அணியின் முகமாக யார் இருப்பார்கள் என்ற கேள்விக்கு பதிலளிப்பதை அவர் தவிர்த்து விட்டார்.

முன்னதாக உயர் அதிகாரப் பதவி மீதோ அல்லது பிரதமர் பதவி மீதோ காங்கிரஸுக்கு விருப்பமில்லை என்று அவர் கூறியிருந்தார். எங்கள் நோக்கமெல்லாம் அரசமைப்பு சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்பதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்று இதற்கு அர்த்தமாகும் என்றார்.

எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டின் நலன்கருதி நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். நாங்கள் ஒற்றுமையாக பா.ஜ.க.வை தேர்தலில் எதிர்கொண்டு அதில் வெற்றிபெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே பா.ஜ.க.வின் கொள்கைகளை மற்றும அவர்களின் செயல்பாடுகளை எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. நாட்டின் செல்வம் பறிக்கப்பட்டு மோடியின் நண்பர்களிடம் கொடுக்கப்படுகிறது.

இது இந்தியா மீதான தாக்குதலை எதிர்த்து நடத்தும் போராட்டமாகும். இது இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான போட்டியாகும் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து பேசிய உத்தவ் தாக்ரே, நாங்கள் குடும்பத்துக்காக போராடுவதாக சிலர் கூறிவருகின்றனர் (மோடியை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்) ஆனால், நாடுதான் எங்களுக்கு குடும்பம். நாட்டை பாதுகாப்பதற்கே நாங்கள் போராடி வருகிறோம் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

அதேபோல் புதிய கூட்டணியான “இந்தியா”வை எதிர்கொள்ள பா.ஜ.க.வுக்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்டு மேற்கு வங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி சவால் விட்டார். மேலும், நாங்கள் தேசபக்தி கொண்டவர்கள். எங்களுடன் விவசாயிகளும் இருக்கிறார்கள். தலித்துகளும் இருக்கிறார்கள். நாட்டை காக்க நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். வரும் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைவது உறுதி என்றார் பானர்ஜி.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டிற்கு நல்லது செய்ய பிரதமர் மோடிக்கு பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதை அவர் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல மணிப்பூரில் மனிதகுலத்துக்கு எதிரான தாக்குதல் நடத்துவதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிறுபான்மையினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டாட்சி த்த்துவத்தை பலவீனப்படுத்துவது, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் அதிகார வரம்பை மீறிச் செயல்படுவது, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது புலனாய்வு அமைப்புகளை ஏவி பழிவாங்கும் போக்கில் செயல்படுவது ஆகியவற்றை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com