கர்நாடக தேர்தலில் கிங் மேக்கராக வலம்வர உள்ள ஜேடிஎஸ்!

கர்நாடக தேர்தலில் கிங் மேக்கராக வலம்வர உள்ள ஜேடிஎஸ்!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு கேட்டு தூதுவிட்டுள்ளதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தெரிவித்துள்ளது.

மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாளான 13 ஆம் தேதி அவர் பெங்களூர் திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தொங்கு சட்டப்பேரவைதான் அமையும் என்ற சூழலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களிடம் ஆதரவு கேட்டு தூதுவிட்டுள்ளதாகவும் எந்த கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து முடிவு செய்து விட்டதாகவும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. இரு கட்சியினரும் ஆதரவு கேட்டு தூதுவிட்டுள்ளனர். எனினும் யாரை ஆதரிப்பது என்பது குறித்து நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம். நேரம் வரும்போது அதை அறவிப்போம் என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தன்வீர் அகமது தெரிவித்துள்ளார்.

எனினும் ஆதரவு கேட்டு மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு தூதுவிட்டதாக கூறப்படும் செய்தியை பா.ஜ.க. மறுத்துள்ளது. ஆதரவு கேட்டு நாங்கள் யாரையும் தொடர்பு

கொள்ளவில்லை. பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. நிச்சயம் 120 இடங்களில் வெற்றிபெறும். தனித்து ஆட்சி அமைக்கும் இடத்தில் நாங்கள் உள்ளோம் என்றும் ஷோபா குறிப்பிட்டார்.

ஆனாலும், ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு தூது விட்டதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி கூறியுள்ளது. ஆட்சியமைக்க எங்கள் தயவு தேவை என்பதால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் ஆதரவு கேட்டு கேட்டு தூது விட்டுள்ளனர் என்றார் தன்வீர் அகமது.

கர்நாடக மக்களின் நலனுக்கு தேசிய கட்சிகள் செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்கவே கர்நாடக மக்கள் பிராந்திய கட்சியான எங்களை ஆதரித்து வந்துள்ளனர். பிராந்திய கட்சியால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவமுடியாது என்று நினைப்பதற்கு காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்த கட்சியை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று கேட்டதற்கு, “கர்நாடகம் மற்றும் கர்நாடக மாநில மக்களின் நலனுக்கு செயல்படும் கட்சியைத்தான் நாங்கள் ஆதரிப்போம்” என்று தெரிவித்தார்.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்று நம்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, நாங்கள் கணிசமான இடங்களில் வெற்றிபெறுவோம். எங்கள் ஆதரவின்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது. தேசிய கட்சிகள் அளவுக்கு எங்களுக்கு பண பலமோ, ஆள்பலமோ அதிகார பலமோ இல்லை. நாங்கள் பலவீனமான கட்சிதான். ஆனால், ஆட்சியில் பங்குபெறும் அளவுக்கான இடங்களை நாங்கள் பெறுவோம் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com