
திமுகவின் தேர்தல் அறிக்கையில் அரிசி குடும்ப கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொதுவான நிவாரணத்தொகை 4000 , ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை நியாயவிலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதலாக சர்க்கரை, உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும், முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயர்வு, 100 நாள் வேலை திட்டம் 150 நாட்கள் ஆக உயர்வு தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது.
இதுதவிர நீட் தேர்வு ரத்து , விவசாயிகள் மானியம் இட ஒதுக்கீடு மொத்தம் கிட்டத்தட்ட 500 வாக்குறுதிகளை திமுக் வெற்றி பெற்றால் செய்வதாக தனது தேர்தல் அறிக்கையில் உறுதிபட சொல்லியிருந்தார்கள் ஆனால் தேர்தலில் ஜெயித்து பதவியேற்ற கையோடு, இந்த வாக்குறுதிகளில் பல காணாமல் போயின. வெறும் 3 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார்கள் கொரோனாநிவாரண நிதி 4000 இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. மகளிர் அனைவரும் இலவசமாக வெள்ளை போர்ட் பஸ்ஸில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள். பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது இத்தோடு சரி.
''இந்த இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு காரணம் ஏற்கனவே இருந்த அரசு 5 லட்சம் கோடி கடன் சுமையை எங்கள் தலையில் கட்டிவிட்டது. இதற்கே மாதாமாதம் வட்டியாக தமிழக அரசு 50,000 கோடி செலுத்துகிறது கஜானா காலி'' என்றார் நிதியமைச்சர் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட எட்டு மாதம் ஆகிவிட்டது இதுவரை 52 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறது இதையும் தமிழக நிதியமைச்சர்தான் சொல்லியிருக்கிறார்.
அதேசமயம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கழித்து நிதியமைச்சரிடம் ''குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னீர்களே..மேலும் எரிவாயு மானியம் என்னாச்சு?" என்று நிருபர்கள் கேட்டதற்கு, ''அப்படியா சொன்னோம்? எந்த தேதி எந்த வருடம் சொன்னோம்.. அவசரப்படாதீர்கள்'' என்றார் இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
நீட் தேர்வு விவகாரத்திலும் குளறுபடி! நீட் தேர்வுக்கு எதிரான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஆளுநரை சந்தித்தார் அதைத்தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை உடனே உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டதாக தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது அதே தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் முதல்வர் வெள்ள சேதம் மற்றும் நிவாரணம் பற்றி ஆலோசனை நடத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுப் பொருட்கள் வினியோகத்திலும் பல குழப்பங்கள்! பொங்கலுக்கு தமிழக மக்களுக்கு பரிசுப் பொருட்களாக 21 பொருட்கள் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது இந்தக் இருபத்தொரு பொருட்கள் என்பது பையும் கரும்பும் சேர்ந்ததுதான் ஆனால் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் பை வழங்கப்படவில்லை. மேலும் பொருட்களின் தரம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது முதல்வரே வடசென்னையில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்துவிட்டு அதிகாரிகளிடம் கோபித்துக் கொண்டார் என்பதுதான் உண்மை மேலும் பொங்கல் பரிசு பொருளில் எதற்கு கோதுமைமாவு என்பது தெரியவில்லை. திருவண்ணாமலை நியாயவிலை கடைகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியாளர் இரண்டரை டன் வெல்லம் தரமானதாக இல்லை என்று வெல்லம் வழங்குவதை நிறுத்தினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையும் பரபரப்பி ஏற்படுத்தியது. அதில் ''பொங்கல் பரிசுட் தொகுப்பின் பொருட்களெல்லாம் வடநாட்டிலிருந்து வாங்கியிருக்கிறார்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வீரவசனம் பேசிவிட்டு வடமாநிலங்களில் பொருள்களை கொள்முதல் செய்திருக்கிறார்கள். அந்த பைகளீல் இந்தி வார்த்தைகள்தான் இடம்பெற்றிருக்கிறது என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் அதேபோல் பொருட்களின் தரமும் சரியில்லை என்பது மக்கள் கருத்து.
ஆனால் தமிழக உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி இதற்கு விளக்கம் அளித்தபோது ''எதிர்கட்சித் தலைவர் சொல்வதில் உண்மையில்லை. ஆனால் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிகை எடுக்கப்படும். இந்த ஒப்பந்தக்காரர்களை கருப்புப் பட்டியலில் வைக்க உத்தரவிட்டுல்ளேன்'' என்று சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.. என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று?!
அதேபோல நகைக்கடன் தள்ளுபடி விவகாரம்! 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்வதாக திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை நம்பி மொத்தம் 48 லட்சம் நகை கடன்கள் தள்ளுபடி கேட்டு மனு செய்யப்பட்டது. அதில் 13 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப் பட்டு விட்டது. மற்றபடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் பொதுத்துறை ஊழியர்கள், கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆகியோர் குடும்பங்களுக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என்று அரசு அறிவித்து விட்ட்டது. தேர்தல் வாககுறுதியில்ஐப்படி எல்லாம் சொல்லவில்லையே என்று பொதுமக்கள் அங்கலாய்க்கிறார்கள்.
புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்பதும் தேர்தல் அறிக்கையில் உள்ளது ஆனால் தமிழக நிதியமைச்சர் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டார்.
இதைபற்றியெல்லாம் ஆளும்கட்சி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை இப்போதைக்கு அவர்கள் கவனமெல்லாம் – உள்ளாட்சி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் வெற்றிகொள்வது எப்படி என்பது குறித்துதான்! ''அதுவும் பெரிய பிரச்சினை இல்லை.. ஓட்டுக்கு காசு கொடுத்தால் போதும்'' என்று சொல்லி சிரிக்கிறார் ஒரு முக்கிய பிரமுகர். பொதுமக்கள் ஓட்டுக்கு காசு வாங்கும் வரை, அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க கூடாது இது எல்லா ஆளும் கட்சிக்கும் பொருந்தும்!