அண்ணாவுக்கு அறிஞர் பட்டம் கொடுத்தவர் கல்கி!

அண்ணாவுக்கு அறிஞர் பட்டம் கொடுத்தவர் கல்கி!

எம்.கோதண்டபாணி

(செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள்).

மிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் அறிஞர் அண்ணா அவர்கள். இன்று அவரது 114ஆவது பிறந்த தினம் ஒரு சமயம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தமிழகம் வந்திருந்தபோது பள்ளிக்கூடம் ஒன்றில் உரையாற்றினார்.

நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, அதை மொழிபெயர்ப்பாளர் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது எனது உரையை தமிழில் மொழிபெயர்க்கிறீர்களா?’ என்று கேட்டார்.

அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து, ‘நான் மொழி பெயர்க்கிறேன்’ என்று சொன்னான். அதன்படியே நேரு அவர்களின் உரையை தமிழில் மொழிபெயர்த்தான். அந்த மாணவன்தான் பிற்காலத்தில் அறிஞர் அண்ணா என அன்போடு அழைக்கப்பட்டார்!

சி.என்.அண்ணாதுரை அழைக்கப்பட்டு வந்த இவர், அறிஞர் அண்ணா என அழைக்கப்படக் காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? அவர்தான் அமரர் கல்கி அவர்கள்.

புகழ் பெற்ற எழுத்தாளர் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்திற்கு வருவதாக இருந்த முதன்மைப் பேச்சாளர் வரவில்லை.

அந்நிலையில் கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி, 'உங்களில் யாரேனும் இந்தக் கூட்டத்தில் பேசுகிறீர்களா?' எனக் கேட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த அண்ணாதுரை எழுந்து சென்று பேசினார். அவரது பேச்சைக் கேட்ட கல்கி அவர்கள், 'இன்று முதல் இவர் அண்ணாதுரை இல்லை! அறிஞர் அண்ணா!!' என்று பாராட்டிப் பேசினார். அதுவே அவரது பெயராக நிலைத்து விட்டது.

அதேபோல் வேறொரு கூட்டத்தில் பேசிய அமரர் கல்கி அவர்கள், நாடகக் கலையைப் பற்றிப் பேசும்போதெல்லம், ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னாட்ஷாவை நினைத்து ஒரு குரல் எழுப்புவது வழக்கம். நாடகம், கீடகம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாம்.

ஆனால், பெர்னாட்ஷாவுக்கு எங்கே போவது? திருடப்போக வேண்டியதுதான் என்று சொல்வார்கள். ஆனால்,தமிழ்நாட்டில் நாடக ஆசிரியர்கள் இல்லாமல் போய்விடவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.

அண்மையில் திருச்சிராப்பள்ளியில் 'ஓர் இரவு' எனும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததின் பயனாக இதோ ஒரு பெர்னாட்ஷா தமிழ்நாட்டில் இருக்கிறார் என்று தெரிகிறது என்று பேசினார் அமரர் கல்கி அவர்கள்.

கொள்கைகளும் கோட்பாடுகளும் இவ்விருவருக்கும் வெவ்வேறாக இருப்பினும், அறிவையும் திறமையையும் உள்ளது உள்ளபடியே உரைத்துப் பாராட்டிப் பேசுவதில் அக்காலத்தில் இருந்தவர்களுக்கு இணை இக்காலத்தில் எவரும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com