கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் - டெல்லி மேலிடம் முடிவு செய்கிறது!

கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் - டெல்லி மேலிடம் முடிவு செய்கிறது!

சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய அமைச்சர்கள், துறை மாற்றம் குறித்து ஒரு பட்டியலுடன் டெல்லிக்கு கிளம்பிச் சென்றுள்ள முதல்வர், அங்கு டெல்லி மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஒரு வாரம் தொடர்ந்த இழுபறிக்கு பின்னர் முதல்வர் சித்தாராமையா என்பதும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் என்பதும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இனி கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இரட்டைத் தலைமைதான் என்று முடிவுக்கு வந்த நிலையில் மூன்று தலைமையாக மாறியிருக்கிறது.

யார் முதல்வர் என்பதை முடிவு செய்ததில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான கார்கேவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கர்நாடக மாநிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் கார்கேவின் தலையீடு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது மகனும் சித்தாராமையாவின் அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார்.

தற்போது சித்தராமையாவின் ஆதரவளார்கள் சிலர் அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்கள். இன்னும் சிலரை அமைச்சராக்கவும், ஒரு சிலரின் துறைகளை மாற்றுவதற்கும் முதல்வர் முயற்சி செய்து வருகிறார். அதற்கு துணை முதல்வராக உள்ள டி.கே .சிவக்குமார், தேசியத் தலைவர் கார்கே உள்ளிட்டவர்களின் ஆதரவை பெறும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே எந்தவொரு போட்டியும் வந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு கார்கேவுக்கு தரப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தலையிடும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்வர்களை கூட நியமிக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் மேலிடம் பெற்றிருந்தது. ஆனால், சமீபத்திய பத்தாண்டுகளில் நிலைமை மாறியிருக்கிறது. மாநில அளவில் வலுவான தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். இது இந்திரா காந்திக்கு காலத்திற்கு முன்பு காங்கிரஸ் இருந்த காலத்தை நினைவுப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

காங்கிரஸ் மேலிடம், முதல்வர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை முடிவு செய்யும் காலம் மாறிவிட்டது என்று நினைத்திருந்த நிலையில் கர்நாடகாவின் அரசியல் சூழல், கட்சியை பழைய நிலைக்கு இட்டு செல்கிறது என்கிறார்கள்.

ஒரு முதல்வர் தன்னுடைய அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து டெல்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே கட்சியின் தலைவரோடும், துணை முதல்வரோடும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்துமளவுக்கு சூழல் மாறியிருக்கிறது என்கிறார்கள்.

பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் தலைவரோ அல்லது கட்சியின் மேலிடமோ தலையிடவேண்டும். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்துவது ஆரோக்கியமான விஷயமல்ல என்கிறார்கள், கர்நாடகா பா.ஜ.கவினர். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் இருந்த காலத்திலும் அனைத்தையும் முடிவு செய்யக்கூடிய இடத்தில் பா.ஜ.கவின் தேசியத் தலைமை இருந்தது என்பதையும் மறந்துவிடமுடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com