கர்நாடக தேர்தல்: மோடி, சோனியா, பிரியங்கா இறுதிக்கட்ட பிரசாரம்!

கர்நாடக தேர்தல்: மோடி, சோனியா, பிரியங்கா இறுதிக்கட்ட பிரசாரம்!

கர்நாடகத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, பிரியங்கா ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மைசூரு அருகே நஞ்சன்கூடில் ஒரு தேர்தல் கூட்டத்தல் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் பிரிவினையை தூண்டி வருகிறது. கர்நாடகத்தின் இறையாண்மையை காப்போம் என்று காங்கிரஸ் பேசி வருகிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? நாட்டை துண்டாட காங்கிரஸ் நினைக்கிறது. இதற்கு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றார். காங்கிரஸ் மாநிலத்து மாநிலம் வகுப்புவாதத்தை தூண்டி வருகிரது. நாம் ஒற்றுமையாக இருந்து காங்கிரஸின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக ஹப்பாலி என்னுமிடத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கர்நாடகத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று பேசியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியை தாக்கி பிரதமர் மோடி பேசியுள்ளதற்கு மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி இருவரும் நாட்டிற்காக இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்தவர்கள். இது மக்களுக்கே நன்கு தெரியும். அப்படியிருக்கையில் காங்கிரஸை கட்சியை நாட்டை துண்டாட நினைப்பதாக எப்படி குற்றஞ்சாட்டலாம் என கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி பயங்கராவதத்தின் பின்னணியில் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பா.ஜ.க. ஆட்சியின் லஞ்ச ஊழல் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கு ஆதாரம் கேட்கும்போது, மோடியின் குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் கேட்கப்படுமா என்றும் சிபல் கேள்வி எழுப்பினார்.

தட்சிண கன்னட மாவட்டம், மூட்பித்ரி என்னுமிடத்தில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் தேர்தல் வரும்போதுதான் பயங்கரவாதத்தையும், தேசப்பாதுகாப்பையும் பற்றி பேசகின்றனர். மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுவதே இல்லை. ஊழலும், கொள்ளை, வேலையின்மைதான் உண்மையான பயங்கரவாதம். ஆளும் பா.ஜ.க. அரசு இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாண தவறிவிட்டது என்றார்.

இதனிடையே பா.ஜ.க. ஆட்சியில் எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் என்று காங்கிரஸ் வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமும் இது குறித்து பதிலளிக்குமாறு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவிக்கையில் பா.ஜ.க.வின் ஊழல் பட்டியல் நான் கொடுத்தவை அல்ல. பாஜக தலைவர்கள் கொடுத்த தகவல்களைத்தான் நான் வெளியிட்டுள்ளேன்.

பா.ஜ.க. தலைவர்கள் கோலிஹட் சேகர் மற்றும் ஹெச். விஸ்வநாத் ஆகியோர்தான் இந்த பட்டியலை வெளியிட்டனர். முதல்வர் பதவிக்கு என்ன விலை, மடத்தின் தலைவர்களுக்கு என்ன விலை, வேலைவாங்கித் தருவதற்கு எவ்வளவு, இடமாற்றத்துக்கு எவ்வளவு என்பதை அவர்கள்தான் தெரிவித்தார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பா.ஜ.க.வின் மூன்றாண்டு ஆட்சி காலத்தில் ரூ.1.50,000 லட்சம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 40 சதவீதம் கமிஷன் அரசு என்றும் பெயர் வாங்கியுள்ளது. ஊழலை ஒழிக்க வேண்டுமானால், மக்கள் அந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து கர்நாடக தேர்தல் தொடர்பாக விளம்பரம் கொடுப்பவர்கள் அதன் விவரங்களை முன்னதாக வெளியிட்டு தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெறவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இங்கு கடந்த மார்ச் மாதம் தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் நிறுவன அமைப்பாளரும் தில்லி முதல்வருமான கெஜ்ரிவால் தொடங்கிவைத்த போதிலும் அதன் பிறகு அவர் பிரசாரத்திற்கு வரவில்லை.

ஆம் ஆத்மி கட்சியின் இதர தலைவர்களான ராகவ் சதா, சஞ்சய் சிங் மற்றும் உள்ளூர் தலைவர்களே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த கட்சிக்கு மக்கள் எந்த வகையில் ஆதரவு அளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கர்நாடகத்தில் இன்னும் இரண்டுநாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதாதளம் என மும்முனை போட்டி நிலவுகிறது.

பிராந்திய கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளம் 35 இடங்களில் வெற்றுபெறுமானால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது கடினமாகத்தான் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com