கர்நாடக தேர்தல்: ஆம் ஆத்மியைவிட 'நோட்டா' வாக்குகள் அதிகம்!
கர்நாடகத்தில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இழந்த ஆட்சியை மீட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. கிங் மேக்கர் என கருதப்பட்ட மதச்சார்பற்ற ஜனதாதளமும் தனது நிலையை தக்கவைத்துக் கொள்ள போராடியது. இந்த மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தல் சறுக்கலாக அமைந்த்து. கடந்த தேர்தலில் 104 இடங்களில் வென்ற அந்த கட்சி இந்த முறை 62 இடங்களையே வெல்ல முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் என்வென்றால் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் இறங்கியதுதான். தென் மாநிலங்களில் தடம் பதிக்கும் நோக்கில் அந்த கட்சி 208 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தது.
கர்நாடகத்தில் ஆம் ஆத்மி களம் இறங்குவதை அடுத்து கடந்த மார்ச் மாதம் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூர் வந்து ஆம் ஆத்மி போட்டியிடுவதை அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவைத்தார். ஆனாலும் அக்கட்சி தேர்தலில் ஒரு இடங்களில்கூட வெற்றிபெற முடியவில்லை. தேர்தல் பிரசாரத்துக்காக அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமுறைகூட இங்கு வரவில்லை.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 2,25,866 வாக்குகள் கிடைத்துள்ளன, அதாவது 0.58 வாக்கு சதவீத்த்தை மட்டுமே அக்கட்சி பெற்றுள்ளது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியைவிட “நோட்டா”வுக்கு (NOTA) 2,69,763 வாக்குகள் கிடைத்துள்ளன. ஆம் ஆத்மி வேட்பாளர் அனைவரும் இந்த தேர்தலில் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர்.
தில்லியில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, அடுத்து பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு இதர மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு தனது எல்லையை விரிவுபடுத்த முயன்றது. குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றது. அதாவது 13 சதவீத வாக்குகளைப் பெற்றது.
இந்த தேர்தலில் 208 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும் 72 வேட்பாளர்கள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளை பெறமுடிந்தது.
சிக்பெட் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் காலப்பா, ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால், அவரால் 600 வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் அக்கட்சி
போட்டியிட்ட போதிலும் 16 தொகுதிகளில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளை பெற்றது. மகாதேவபுராவில் ஆம் ஆத்மி வேட்பாளர் சி.ஆர்.நடராஜ் அதிகபட்சமாக 4,5551 வாக்குகள் பெற்றார். பெங்களூரு தெற்கு தொகுதியில் அக்கட்சி வேட்பாளருக்கு 2,585 வாக்குள் மட்டுமே கிடைத்துள்ளன. வட கர்நாடகத்தில் 3 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 3,000-த்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
ஆட்சிக்கு வந்தால் உள்ளூர் மக்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்படும், பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 33 சதவீதம் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்த்து.