கர்நாடக தேர்தல்: காங்கிரஸ்க்கு சாதகமான கருத்து கணிப்பு முடிவுகள்!

கர்நாடக தேர்தல்: காங்கிரஸ்க்கு சாதகமான கருத்து கணிப்பு முடிவுகள்!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எனினும் ஒரு சில கருத்துக்கணிப்புகள் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் யாருக்கு ஆதரவு என்பதை தீர்மானிக்கும் வகையில் மதச்சார்பற்ற ஜனதாதளம் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவிக்கின்றன.

கர்நாடகத்தில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. ஏறக்குறைய 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சியான பா.ஜ.க. எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியோ இழந்துவிட்ட ஆட்சியை மீண்டும் பெற்றுவிட துடிக்கிறது.

தேர்தல் முடிவுகள் வருகிற 13 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. இந்த நிலையில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் எடுக்கப்பட்ட பெரும்பான்மையான கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடத்தப்பட்ட எட்டு கருத்துக்கணிப்புகளில் 7 இல் பா.ஜ.க.வைவிட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நான்கு கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களைவிட அதிக இடங்களைப் பெறும் என்றும் மூன்றில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்ற தனிப்பெருங்கட்சியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு கருத்துக்கணிப்பில் பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

7 கருத்து கணிப்புகளில் பா.ஜ.க.வுக்கு 100 இடங்களைவிட குறைவாகவே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் 100 இடங்களுக்கு மேல், பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 80, காங்கிரஸ் கட்சிக்கு 140 இடங்கள் கிடைக்கலாம் என்றும், நியூஸ்நேஷன்- சிஜிஎஸ் நடத்திய கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 114, காங்கிரசுக்கு 86 இடங்கள் கிடைக்கலாம் என்று கணித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி நிச்சயம் 146 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். கர்நாடகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி முறை செயல்படத் தவறிவிட்டதால் மக்கள் காங்கிஸ்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெறும் கணிப்புகள்தான். அவை 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 13 ஆம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள். பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கப் போவது பா.ஜ.க.தான் என்கிறார் முதல்வர் பசவராஜ் பொம்மை.

மைசூரு பிராந்தியத்தில் செல்வாக்கு உள்ள அரசியல்கட்சி மதச்சார்பற்ற ஜனதாதளம். கர்நாடகத்தை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் (கிங் மேக்கர்) அக்கட்சி இருந்துள்ளது. ஆனால். இந்த தேர்தலில் அந்தகட்சிக்கு 25 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்கின்றன இந்த கருத்துக்கணிப்புகள். எனினும் நாங்கள்தான் “கிங் மேக்கராக” இருப்போம் என்கிறார் முன்னாள் முதல்வரான ஹெச்.டி.குமாரசாமி.

2018 ஆம் ஆண்டில் பா.ஜ.க. 108 இடங்களில் வென்றிருந்தது. காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களையும் பெற்றிருந்த போதிலும் அவை இரண்டும் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. ஆனாலும் அந்த ஆட்சி வெகுநாள் நீடிக்கவில்லை. 2019 இல் ஆட்சி கவிழ்ந்தது.

தென்மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் கர்நாடகம்தான். எனவே இந்த தேர்தல் பா.ஜ.க.வுக்கு முக்கியமானது மட்டுமல்ல சவால் நிறைந்தது. ஒருபுறம் ஊழல் அரசு, நிர்வாகச் சீர்கேடு, வேலையின்மை அதிகரிப்பு என்ற குற்றச்சாட்டுகள். மறுபுறம் புதிய தலைமுறை

இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த முறை பா.ஜ.க. அவர்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கி முதியவர்களை புறக்கணித்தது. இதனால் ஜெகதீஷ் ஷட்டர், முன்னாள் துணை முதல்வர் சவாதி உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சிக்கு தாவி தேர்தலை சந்திக்கின்றனர். எனவே கடுமையான சவால்களை சந்திக்கும் நிலையில் பா.ஜ.க. உள்ளது.

பசவராஜ் பொம்மைக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு இல்லாததால் இந்த முறை லிங்காயத்துகளிடம் செல்வாக்கு பெற்ற எடியூரப்பாவை தேர்தல் பிரசார களத்தில் இறக்கியுள்ளது பா.ஜ.க. இது தவிர பிரதமர் மோடியே 21-க்கும் மேலான பேரணி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் இழந்துவிட்ட ஆட்சியை பெறுவதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. காங்கிரஸ் கட்சி தேசிய பிரச்னை, அதானி விவகாரம், சீன ஊடுருவல் போன்ற பிரச்னைகளை முன்வைக்காமல் மாநில பிரச்னைகளை முன்வைத்தே பிரசாரத்தில் ஈடுபட்டது. மேலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000 உதவித்தொகை, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என தேர்தல் வாக்குறுதிகளை அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டது. எனினும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளம் தடை செய்யப்படும் என்ற வாக்குறுதி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது காங்கிரஸ்

கட்சியில் தேர்தல் வெற்றியை பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு மைசூரு பகுதியிலும் வொக்கலிகா மக்களிடையேதான் அதிகம் செல்வாக்கு. மகளிர் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன்கள் ரத்துச் செய்யப்படும், ஆண்டுக்கு ஐந்து எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து அக்கட்சி பிரசாரம் செய்துள்ளது. இந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி குறைந்த பட்சம் 35 இடங்களுக்கு மேல் வென்றால்தான் ஆட்சியமைப்பது யார் என்பதில் அக்கட்சி முக்கிய பங்கு வகிக்க முடியும். ஆனால், அக்கட்சிக்கு 25 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது இன்னும் 48 மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com