கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் ரூ.375 கோடி மதிப்புள்ள ரொக்கம், மதுபானங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ரூ.288 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில் தேர்தல் பணிக்குழு இந்த தகவல்களைக் கூறியுள்ளது.
மே 10 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தாலும் மே 13 ஆம் தேதிதான் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.கடந்த 2018 ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் பொருள்களின் மதிப்பைவிட நான்கரை மடங்கு அதிகமாக, அதாவது ரூ.375 கோடி மதிப்புக்கு பணம், பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலையொட்டி மாநிலத்தில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணம் கொண்டு செல்லப்படுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. இதற்கு பக்கத்து மாநில அதிகாரிகளும் ஒத்துழைத்தனர்.
இந்த முறை ரூ.147.46 கோடி ரொக்கம், ரூ.83.66 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.23.6 கோடி மதிப்புக்கு மருந்துகள், ரூ.96.06 கோடிக்கு தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்புள்ள பொருள்கள் மற்றும் ரூ.24.21 கோடிக்கு இலவசமாக வழங்கப்படும் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலின்போது மொத்தம் ரூ.83.93 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், இப்போது அதைவிட நான்கரை மடங்கு அதிக மதிப்புக்கு அதாவது ரூ.375 கோடிக்கு பணம், மதுபானங்கள், மற்றும் வாக்களார்களுக்கு வழங்கப்பட விருந்த இலவச பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர அமலாக்கத்துறை இயக்குநரகம் ரூ.288 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது. மருந்துகள், போதைப் பொருள்கள், மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ரொக்கம், மதுபானங்கள் தவிர வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்படிருந்த புடவைகள், உணவுப் பொருள்கள், குக்கர்கள், குளிர்சாதன கருவிகள் உள்ளிட்ட இலவச பொருள்கள் கல்புர்கி, சிமங்களூர், பைல்ஹோங்கல், குனிகல் உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்டன.
81 தொகுதிகளில் அதிக பணம் செலவிடப்படும் தொகுதிகளாக தெரிவு செய்யப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது. தேர்தல் செலவின பார்வையாளர் பணியில் 146 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கர்நாடகத்தை ஒட்டியுள்ள மகாராஷ்டிரம், கோவா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளிலும் தீவிர சோதனைகள் நடந்தப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.