இமாச்சல பிரதேச தேர்தல்
இமாச்சல பிரதேச தேர்தல்

கர்நாடக தேர்தல் - 2018 வரலாறு திரும்புகிறதா?

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 2018ல் 72.36 சதவீத வாக்குகள் பதிவானதால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டதும். பா.ஜ.க மட்டுமே 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2023 ஜனவரி மாதம் மத்திய கர்நாடக பகுதிகளில் பயணம் செய்திருந்தால் சட்டமன்றத் தேர்தலுக்கான எந்த பணிகளும் தொடங்கப்படாத நிலையை பார்த்திருக்க முடியும். ஜனவரி கடைசி வரை இதே நிலைதான் நீடித்தது. ஆனால், பிப்ரவரி தொடங்கி சட்டமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்புகளும், அறிக்கைப் போர்களும் வெளியாக ஆரம்பித்தன.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதென்று மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் ஆரம்பமாகின. ஆரம்பம் முதல் பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் மோதிக்கொண்டன. ஜனதா தளமோ பாத யாத்திரையில் கவனம் செலுத்தியது.

நூறு நாட்களில் நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களில் ஏராளமான தேசியத் தலைவர்கள் பிரச்சாரத்திற்காக கர்நாடகத்தில் குவிந்தார்கள். வளர்ச்சி அரசியல் முதல் ஊழல் குற்றச்சாட்டுகள் வரை பிரச்சாரத்தில் அனைத்தும் பேசப்பட்டன. சாதி அரசியல் முதல் மதவாத அரசியல் வரை அனைத்தும் பிரச்சாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

காங்கிரஸ், பா.ஜ.க இருபெரும் தேசியக்கட்சிகளும் மூன்று கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. முதல் நூறு இடங்களுக்கு வேட்பாளரை இறுதி செய்வதில் பிரச்னையில்லை. ஆனால், எஞ்சியுள்ள இடங்களுக்கு வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் இரண்டு கட்சிகளுமே தடுமாறின. இடம் கிடைக்காதவர்கள் ஜனதா தளத்தில் சேர்ந்து போட்டியிட்டார்கள். ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.கவுக்கும் பா.ஜ.கவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும் காட்சியையும் பார்க்க முடிந்தது.

சட்ட மன்றத்தேர்தல்களில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் நேரடியாக மோதியிருக்கிறார்கள். மேல்கோட்டை தொகுதியில் மட்டும் தோழமைக் கட்சியான விவசாய கட்சி தலைவர் புட்டண்ணய்யா மகன் தர்ஷனுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து வேட்பாளரை வாபஸ் பெற்றது.

கர்நாடக அரசியலில் மூன்றாவது கட்சியாக, தவிர்க்க முடியாத கட்சியாக இருந்து வரும் குமாரசாமியின் ஜனதா தளம் கட்சி, 209 இடங்களில் போட்டியிட்டது.

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முதல் ஆறு மணி நேரம் மந்தமாக இருந்தாலும் பிற்பகலில் விறுவிறுப்படைந்தது. 70 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியிருப்பதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்பார்த்தது போல் பெங்களூர் போன்ற நகரங்களில் வாக்குப்பதிவு குறைவாகவும், மங்களூர் பகுதிகளில் வாக்குப்பதிவு வழக்கத்தை விட அதிகமாகவும் இருந்திருக்கிறது.

வாக்குப்பதிவுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கருத்துகணிப்புகளின் படி எந்தக்கட்சிக்கும் ஆட்சியமைக்க மெஜாரிட்டி கிடைக்காதென்றும் தகவல்கள் வருகின்றன. ஒரு சில கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

2018 தேர்தலைப் போலவே வாக்குப்பதிவும் 73 சதவீதம் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் எங்கெல்லாம் வாக்குப்பதிவு அதிகமாக இருந்ததோ அதே இடங்களில் இம்முறை வாக்குப்பதிவு அதிகமாக இருந்திருக்கிறது. பெங்களூர் போன்ற நகரங்களில் வழக்கம்போல் குறைவான வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

இதன் காரணமாக 2018 தேர்தல் முடிவுகளைப் போல் இம்முறையும் இழுபறியாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சென்ற முறை 100 தொகுதிகளை பா.ஜ.க கடந்ததது. ஆனாலும், தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இம்முறை காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளை கடந்துவிடும். ஆனாலும், தனிப்பெரும்பான்மைக்காக பிற காட்சிகளை சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

பெரும்பாலான இடங்களில் ஜனதா தளம் கட்சி மூன்றாமிடமும் ஒரு சில இடங்களில் இரண்டாமிடமும் பெறக்கூடும். எனினும், கருத்துக்கணிப்புகள் குறைந்தபட்சம் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனதா தளத்திற்கு கிடைக்கும் என்கிறார்கள். வழக்கம் போல் கிங் மேக்கர் ஆவார்களா? என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com