
சென்னையில் காமராஜரின் 121 வந்து பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, “எடப்பாடி பழனிச்சாமி தற்போது மன்னிப்பு கடிதம் கேட்டு ஆட்களை இழுக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார். ஆனால் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டியது அவரும் அவருடைய ஆதரவாளர்களும் தான். ஏனென்றால் எங்கள் மூவருக்கு துரோகம் செய்தது அவர்கள் தான்.
வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போதுதான் முடிவு செய்யப்படும். கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
இபிஎஸ் முதல்வராக இருந்தபோது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறித்த ஆவணங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. அம்மாவுக்கு பிடித்த இடத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். திமுக அரசு கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ பன்னீர்செல்வம் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு எங்களுடைய முழு ஆதாரம் உண்டு என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு, அப்போது ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தாலும் அவருக்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றும், அம்மாவின் ஆட்சி முழுமையாக இருக்க வேண்டும் என்பதாலும் அதை எல்லாம் சகித்துக் கொண்டு இருந்ததாக ஓ.பன்னீர்செல்வமே கூறியிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.