கோலார் கோஷ்டி மோதல் - ராகுல் காந்தியின் பதவியைப் பறித்த கோலார், முதல்வர் வேட்பாளரை முடிவு செய்கிறதா?

கோலார் கோஷ்டி மோதல் - ராகுல் காந்தியின் பதவியைப் பறித்த கோலார், முதல்வர் வேட்பாளரை முடிவு செய்கிறதா?

கோலார் தொகுதியை முன்வைத்துதான் அரசியல் புயல் மையம் கொண்டிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே தொகுதியில் ராகுல் காந்திய பேசிய சர்ச்சை பேச்சு, அவரது பதவியை காவு வாங்கியது. தேசிய அளவில் கோலார் என்னும் பெயர் கவனம் பெற்றிருப்பதால் கோலார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி எழுந்துள்ளது.

கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி முகம் காணும் என்று தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சீதாராமையா, டி.கே. சிவகுமார் என இரட்டைத் தலைமையோடு தேர்தலை சந்திக்கும் கர்நாடக காங்கிரஸ், யார் முதல்வர் வேட்பாளர் என்பதை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. டெல்லி மேலிடமும் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள்.

கோலார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு சீதாராமையா, சிவக்குமார் என இருவருமே மோதி வருகிறார்கள். சென்றவாரம் கட்சியின் மக்கள் குரல் நிகழ்ச்சியை கோலாரில் நடத்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவகுமார், கோலார் தொகுதியில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெறவேண்டும் என்ற விரும்புவதாக தெரிவித்தார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கை சின்னம் வெற்றி பெறுவதற்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஒருவேளை காங்கிரஸ் கட்சி, கோலார் தொகுதியில் தோற்றுப்போனால் ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சால் கோலார் தொகுதி மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்று பா.ஜ.க விமர்சனம் செய்ய வாய்ப்புண்டு. அதை எதிர்கொள்வதற்காகவே வலுவான வேட்பாளரையும், பிரச்சாரங்களில் கூடுதல் முக்கியத்துவம் தர கர்நாடக காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது.

கோலார் தொகுதி முழுவதும் டி.கே சிவகுமார் நடத்திய மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு திரளான மக்கள் வந்திருந்தார்கள். கோலார், மாலூர், சீனிவாஸ்பூர், முல்பாகல் பங்காருபேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. 2019ல் ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு பின்னரும் தோல்வியை தழுவிய முன்னாள் மத்திய அமைச்சர் முனியப்பா, இம்முறை தொகுதி வேறு தொகுதியில் போட்டியிடுகிறார். இவரும் டி.கே, சிவகுமாரின் ஆதரவாளர் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் கோலார் தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், வருணாவில் போட்டியிடுமாறு கட்சியின் தலைமை அவரை கேட்டுக்கொண்டிருந்தது. அதன்படி வருணா தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார். இது தவிர கோலார் தொகுதியிலும் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

நேற்று வெளியான மூன்றாவது வேட்பாளர் பட்டியலில் கோலார் தொகுதி, கொத்தூர் மஞ்சுநாத் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவின் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்திருப்பவருக்கு கோலார் தொகுதி ஒதுக்கப்பட்டதால் சீதாராமையா ஆதரவாளர்கள் கோபமடைந்தார்கள்.

அதிருப்தி காரணமாக எழுந்த பிரச்னையில் கோலார் காங்கிரஸ் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதமாகியுள்ளன. தடுக்க முயற்சி செய்த மூன்று பேரின் மண்டை உடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கோலார் தொகுதி தலைப்புச்செய்தியாகியிருக்கிறது. இம்முறை ராகுல் காந்தியின் பேச்சால் அல்ல. சீதாரமையாவுக்கும் டி.கே சிவகுமாருக்கும் இடையேயான பலப்பரீட்சையால். தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் ஆரம்பமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com