எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சோனியாவுக்கு முக்கிய பங்கு?

எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சோனியாவுக்கு முக்கிய பங்கு?

பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள 26 எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான தேர்தல் வியூகம், தேர்தல் பிரசாரம், பேரணி, மாநாடு, தொகுதி உடன்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு முக்கிய பங்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல்நாளான திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி முக்கிய ஆலோசனைகள் நடத்தினர். பின்னர் இரவு விருந்து நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தில் தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக இருக்கும் சோனியா காந்திக்கு, புதிய அணியின் தலைமை பொறுப்பும், நிதிஷ்குமாருக்கு அமைப்பாளர் பொறுப்பும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

சோனியாகாந்தி தவிர, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல்காந்தி. முதல்வர்கள் எம்.கே.ஸ்டாலின், நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரியவந்துள்ளது.

புதிய அணிக்கு பெயரை பரிந்துரைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றுபட்டு இருப்போம் என்பதை குறிக்கும் வகையில் அணியின் பெயர் இருக்கும். பொது செயல்திட்டம் வகுப்பது குறித்தும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.சமூக நீதி, தேசத்தின் வளர்ச்சி, மக்கள் நலன் இவற்றை வலியுறுத்தும் வகையில் இணைந்து செயலாற்ற வருமாறு எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஏதேச்சாதிகாரம், வெறுப்பு அரசியல், பிரிவினை, பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றின் பிடியில் சிக்கித்தவிக்கும் மக்களை விடுவிப்பதே நோக்கம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். முன்னதாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தியும், மம்தா பானர்ஜியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்கவும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் ஒன்றுபட்டு செயல்பட இருவரும் ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

கர்நாடகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற அமோக வெற்றிதான் எதிர்க்கட்சிகளை பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றிணைத்துள்ளது.தில்லியில் ஆளும் கட்சியின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு ஆதரவு தரமாட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளதை அடுத்து முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 26 அரசியல் கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் நிலையில் தில்லியில் தேசிய ஜனநாயக முன்னணியின் கூட்டம் பிரதமர் மோடி தலைவமையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தேசிய ஜனநாயக கூட்டணியில் 38 கட்சிகள் சேர்ந்துள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com