எதிர்க்கட்சிகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்: பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அசோக் கெலோட் பேச்சு!
ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் அதைச் செய்வார் என்று நம்புகிறேன் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம், நந்த்வாராவில் நடந்த விழாவில் ரூ.5,000 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் அசோக் கெலோட் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், எதிர்க்கட்சிகளை மதிக்க கற்றுக்கொண்டால் அவை ஆளுங்கட்சியுடன் இணைந்து முழுவீச்சில் நாட்டுக்கு சேவை செய்ய முடியும்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், ராஜீவ்காந்தியும் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் நாடு ஒற்றுமையுடன் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசின் நல்லாட்சியால் நாட்டின் பொருளாதார வளச்சியடைந்த மாநிலங்களில் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மாநிலத்தில் நிறைவேற்றப்படாமல் மீதமிருக்கக்கூடிய திட்டங்கள் குறித்து நான் உங்களுக்கு (பிரதமர் மோடி) கடிதம் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து எழுதுவேன்.
ஜனநாயகத்தில் பகையாளிகள் என்று யாரும் இல்லை. இது கருத்தியலுக்கான யுத்தம். நாட்டு மக்களிடம் எப்போதும் அமைதியும் ஒற்றுமயைும் நிலவ வேண்டும். வன்முறை வளர்ச்சியை பாதிக்கிறது. எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஒரு அரசு சிறப்பாக செயல்பட முடியாது. எதிர்க்கட்சிகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் அசோக் கெலோட்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி ஸ்ரீநாத்ஜி ஆலயத்துக்கு சென்று வழிபட்டார்.