சட்டமன்ற கலகலாட்டா - அதிமுக சார்பில் பேசிய ஓபிஎஸ்; எதிர்த்த ஈபிஎஸ்; விளக்கமளித்த அப்பாவு!

சட்டமன்ற கலகலாட்டா - அதிமுக சார்பில் பேசிய ஓபிஎஸ்; எதிர்த்த ஈபிஎஸ்; விளக்கமளித்த அப்பாவு!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆதரித்து ஓ. பன்னீர் செல்வம் பேசியபோது கூச்சலும் குழப்பம் எழுந்தது. மசோதாவை ஆதரித்துதான் பேசினார் என்றாலும் சர்ச்சையானதற்கு எதிர்க்கட்சித்தலைவரான எடப்பாடியின் எதிர்ப்பு காரணமாக இருந்தது.

நேற்று ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அ.தி.மு.க சார்பில் பேசிய தளவாய் சுந்தரம், மசோதாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஓ.பன்னீர்செல்வம் பேசுவதற்கும் அனுமதியளித்தார்.

ஓ. பன்னீர்செல்வம் பேசும்போது, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு அ.தி.மு.க சார்பில் வரவேற்பை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார். அ.தி.மு.க சார்பில் என்று அவர் குறிப்பிட்டதும் எடப்பாடியின் முகம் மாறியது. உடனே எழுந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சி சார்பில் ஒருவரை பேச அனுமதித்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்தது ஏன் என கேள்வியெழுப்பினார்.

இதனால் சட்டமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. ஓ. பி.எஸ்ஸை பேச அனுமதித்ததை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருக்கையை விட்டு எழுந்து கோஷம் எழுப்பியதும் இ.பி.எஸ் ஆதரவு எம்எல்ஏக்களும் இருக்கை விட்டு எழுந்து கோஷமிட்டனர்.

இதைத் தொடர்ந்து விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தான், அதில் மாற்றுக்கருத்தும் இல்லை. மூத்த உறுப்பினர், முன்னாள் முதல்வர் என்னும் அடிப்படையில்தான் ஓ.பி.எஸ்க்கு பேசுவதற்கு அனுமதி வழங்கினேன் என்று தெரிவித்தார். இது மரபை மீறிய செயல். அப்படி ஒரு விதி பேரவையில் இல்லை என்று கண்டித்த எடப்பாடி, அவரது தலைமையில் அனைத்து அ.தி.மு.கவினரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.

அ.தி.மு.க உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினாலும் சாந்தமான முகத்தோடு, சிரித்தபடியே ஒ.பி.எஸ் அமர்ந்திருந்தார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் எத்தனையோ சுவராசியமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடந்ததும் மறக்க முடியாத சம்பவம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com