”அமேதி, ரேபரேலியில் போட்டியிடுவோம்” - காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த அகிலேஷ் யாதவ்!

”அமேதி, ரேபரேலியில் போட்டியிடுவோம்” - காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த அகிலேஷ் யாதவ்!

சமீபத்தில் கொல்கத்தாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசிய பின் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத புதிய கூட்டணி அமைப்போம் என்று கூறியிருந்த சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது நிலை என்ன என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. ஆனால், நாங்கள் பிராந்திய கட்சிதான் என்று குறிப்பிட்ட அகிலேஷ் யாதவ், வரும் மக்களவைத் தேர்தலில் காந்தி குடும்பத்தினரின் வழக்கமான அமேதி தொகுதியில் சமாஜவாதி கட்சி போட்டியிடும் என்று தெரிவித்தார். 1996 ஆம் ஆண்டிலிருந்து அமேதியில் தமது கட்சி போட்டியிடவில்லை என்றும் ஆனால், வரும் தேர்தலில் களத்தில் குதிக்க தயாராகி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க.வின் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு வென்றார். சோனியா காந்தி பிரதிநிதியாக இருக்கும் ரேபரேலி தொகுதியிலும் தமது கட்சி போட்டியிடத் தயங்காது என்றும் அகிலேஷ் கூறினார்.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற பலமுறை சமாஜவாதி உதவி செய்துள்ளது. ஆனால், சமாவதி கட்சியினருக்கு அநீதி இழைக்கப்படும்போது அதை காங்கிரஸ் தட்டிக் கேட்கவில்லை. எங்கள் கட்சித் தலைவர் அமேதியிலும் ரேபரேலியிலும் சமாஜவாதி போட்டியிட வேண்டும் என்கின்றனர். தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்தில் இது பற்றி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றார்.

காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய அணி அமைப்போம் என்று சொல்கிறீர்கள். தேர்தலில் உங்கள் உத்தி என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, அதை இப்போது வெளியில் சொல்லமாட்டோம். எங்களது ஒரே நோக்கம், பா.ஜ.க.வை வீழ்த்துவதுதான் என்றார் அகிலேஷ்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மத்திய புலனைய்வு அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்க பயன்படுத்தி வருகிறது. பா.ஜ.கவுக்கு எதிராக எந்த கட்சி குரல் கொடுத்தாலும் அமலாக்கத்துறையினர், சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினரை அனுப்பி நடவடிக்கை என்ற பெயரில் பயமுறுத்துகின்றனர். அதே நேரத்தில் பிற கட்சியிலிருந்து பா.ஜ.க.வில் சேர்பவர்கள் மீது அவர்கள் ஊழல்வாதிகளாக இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

காங்கிரஸ் கட்சி முன்னர் செய்த வேலையை இப்போது பா.ஜ.க. செய்கிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்றார் அவர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது கட்ட ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்தது. ஆனால், பின்னர் அதிலிருந்து பின்வாங்கியது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடந்த வேண்டும் என்று பல தலைவர்கள் கோரி வருகின்றனர். ஆனால், பா.ஜ.க. அரசும் அதில் அக்கறை காட்டவில்லை என்றார் அகிலேஷ்.

கடந்த வாரம் கொல்கத்தாவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். அதன் பின்னர் அளித்த பேட்டியில் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக புதிய அணி அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், புதிய அணி அமைப்பது தொடர்பாக ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதாளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை சந்திக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com