இஸ்லாமியர்களின் நலனுக்காக போராடுவோம் - இப்தார் விருந்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு!

இஸ்லாமியர்களின் நலனுக்காக போராடுவோம் - இப்தார் விருந்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு!
Published on

இது இஸ்லாமியர்கள் நோன்பிருக்கும் காலம். நோன்பு துறக்கும் நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது வழக்கம். நேற்று சென்னையில் நடந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று, பேசியிருக்கிறார்.

இஸ்லாமியர்களுடன் இணைந்து செயல்படுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று பேசிய அன்புமணி ராமதாஸ், இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தாக வேண்டும்.

உயர் கல்வி, வேலை வாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு பலனளிக்கிறதா என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து செயல்பட இருப்பதாகவும், சிறுபான்மையோர், ஒடுக்கப்பட்டவர்களோடு ஓரணியில் நிற்பவதில் பாட்டாளி மக்கள் கட்சி என்றும் உறுதியாக இருக்கும் என்றும் அதில் சமரசத்திற்கு இடமில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.

ராம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்வுகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிறுபான்மையோருக்கு ஆதரவாக பேசுவது வழக்கம் என்றாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் நோன்பு துறக்கும் நிகழ்வில் பங்கேற்று வருகின்றன. சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் கர்நாடகாவை பற்றி கேட்கவே வேண்டாம்.

பீகார் மாநிலத்திலும் சிறுபான்மையோரை கவர்வதற்காக அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இஸ்லாமிய வாக்காளர்களை கவரும் வரையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கான பணி நேரத்தில் மாற்றங்களை பீகார் அரசு அமல்படுத்தியிருக்கிறது.

ரம்ஜான் மாதத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அலுவலகம் வந்துவிடலாம். பணி நேரம் முடிவடையும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்தை விட்டு கிளம்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையெடுத்து நவராத்திரி, ராமநவமி போன்ற பண்டிகைகளுக்கும் பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பீகார் பா.ஜ.க தலைவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். நல்லவேளை, தமிழகத்தில் இதெல்லாம் இன்னும் சர்ச்சையாகவில்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com