திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு தடை - செந்தில் பாலாஜி திட்டவட்டம்!
தமிழகத்தில் உள்ள திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், மதுபானம் பயன்படுத்தவும் தமிழ்நாடு அரசு அனுமதியுள்ளதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன. அனுமதி பெற்ற, மதுபானங்களை கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமண மண்டபங்களில் மதுபானங்கள் அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் பல்வேறு பன்னாட்டு நிகழ்வுகள், மாநாடுகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுடனான சந்திப்பு போன்றவை தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறுவது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. மற்ற மாநிலங்களின் ஹோட்டல்கள், தனியார் விடுதிகளில் நடைபெறும் கொண்டாட்டங்களில் மதுபானம் பரிமாறுவதில் எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லை.
தமிழகத்தை பொறுத்தவரை மதுவிலக்கு உள்ள மாநிலம் இல்லையென்றாலும் பொதுவிடங்களில் மதுபானங்கள் பரிமாற தடை தொடர்ந்து வருகிறது. டாஸ்மாக் கலாச்சாரம் உச்சத்தில் இருந்தாலும் பொதுவிடங்களில் மதுகுடிப்பதை அரசு அனுமதிப்பதில்லை. அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பார்களில் குடிப்பதற்குதான் அனுமதி உண்டு. இந்நிலையில் மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பது தெரிகிறது.
பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறும்போது ஆட்சியர்கள் அனுமதியுடன் மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்குவதற்கு புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் கட்டணம் செலுத்தி, உரிய அனுமதியை பெற்றுக்கொள்ளலாம். ஏதாவது நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் நடைபெறவிருந்தால் ஆட்சியர் அனுமதி பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்த இதுவரை இருந்த தடைகள் நீக்கப்படுகின்றன. கட்டணம் செலுத்தி இனி மதுபானம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்புகள் காலை முதல் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. தமிழகத்தின் நகரங்களில் உள்ள மால்கள், ஹோட்டல்கள், ரிசர்ட் போன்ற இடங்களில் மதுபானம் பயன்படுத்துவதற்கு இனி தடை இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திருமண மண்டபங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி தரமுடியாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்தவர், திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை. சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மட்டும் மதுபானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருக்கிறது.ஐ.பி.எல். போன்ற விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களை பயன்படுத்துவதற்கு
அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற விளக்கமளித்திருக்கிறார்.
தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் டாஸ்மாக் கடை வந்துவிட்டது. அவற்றை ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாற்றவேண்டி தினந்தோறும் தமிழகத்தின் ஏதாவது ஒரு ஊரில் கோரிக்கைளும், போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மதுபானங்களை பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்த அனுமதிப்பது தமிழகத்தை இன்னும் மோசமான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.
சென்ற வாரம் 12 மணி வேலை நேர திருத்த மசோதா, இன்று பொதுவிடங்களில் மதுபானங்களை அருந்துவதற்கு அனுமதி என தி.மு.க அரசு அடுத்தடுத்து மேற்கொள்ளும் அதிரடிகளால் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே அதிருப்தியில் இருக்கிறார்கள்.