ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி!
தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க, அதி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான காட்சிகள் தங்களது அடையாளத்தை, தனித்தன்மையை வெளிப்படுத்தும் தேர்தலாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களத்தில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டுள்ளது.

கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், வாக்களர்களுக்கு தொடரும் பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்திருந்தார். ஒவ்வொரு தேர்தலின் போதும், பணம் கொடுத்து வாக்கு வாங்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், தவறிழைப்போர் தண்டிக்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார்.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள், அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தினார்.
தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய மனு மீது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, இது தொடர்பான நிவாரணங்கள் மற்றொரு வழக்கில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.