2024 தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்க்க தயாராகிறது மகா விகாஸ் அகாடி!
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்து, காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாதிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு சவால் விடுக்கும் வகையில் அதை எதிர்க்க மகாராஷ்டிர விகாஸ் அகாதி தயாராகி வருகிறது. இதற்காக கூட்டணியில் வேறு சில சிறிய கட்சிகளையும் சேர்க்கும் முயற்சியில் அது ஈடுபட்டுள்ளது.
மும்பையில் மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணியின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனை உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளதும், காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளதும் எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மகா விகாஸ் அகாதியின் கூட்டம் நடைபெற்றது.
இந்தகூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் தேர்தல்களில் ஒற்றுமையாக இருந்து பா.ஜ.க.வை சந்திக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
கர்நாடகத்தில் பா.ஜ.க. மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தராமல் ஊழல் நிர்வாகத்தில் ஈடுபட்டது. மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தியது. இதுவே அக்கட்சியின் படுதோல்விக்கு முக்கிய காரணமாகும்.
மகாராஷ்டிர மாநில அரசியல் நெருக்கடி குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் உண்மை நிலையை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறிவருகின்றனர். எனினும் மாநில ஆளுநரின் தவறான செயல்பாடுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியதுடன் புதிய அரசு அமைந்த விதம் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே உண்மைநிலை மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.
பா.ஜ.க. மறைமுகமாக சதி செய்து உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்த்துவிட்டதை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
வரும் மக்களவைத் தேர்தல், மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனை உத்தவ் பிரிவுக்கான தொகுதிப் பங்கீடு குறித்தும் விரிவாக பேசவிருக்கிறோம்.
கர்நாடகத்தைப் போலவே மகாராஷ்டிரத்திலும் எங்கள் கூட்டணி மக்கள் நம்பிக்கையை பெறும். நாங்கள் புதிய
பலத்துடன் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்.
எங்கள் கூட்டணியில் இதர சிறிய கட்சிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய சூழலில் வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமாகும்.
மகாராஷ்டிரத்தில் எங்கள் கூட்டணி சார்பில் “வஜ்ரமூத்” என்னும் பெயரில் பேரணிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். வெயில்காலம் முடிந்த பின் இவை நடத்தப்படும் என்று பாடீல் தெரிவித்தார்.
இதனிடையே பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் மாதவ் பண்டாரி, கர்நாடகத்தைப் போலவே மகாராஷ்டிரத்திலும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எதிர்க்கட்சி கூட்டணி நினைக்கிறது. இது முட்டாள்தனமாகும். கடந்த சில வாரங்களாகவே கூட்டணிக்குள் உள்கட்சி மோதல் இருந்துவருவது அனைவருக்கும் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.