விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 மகாராஷ்டிரா அரசின் திடீர் அறிவிப்பு!

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 மகாராஷ்டிரா அரசின் திடீர் அறிவிப்பு!

மகாராஷ்டிரத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கும் திட்டத்தை ஷிண்டே தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 1 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியானதாக சொல்லப்படுகிறது.

தற்போது மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கி வருகிறது. மாநில அரசு ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவியாக கிடைக்கும்.

விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்துக்கு நமோ ஷேத்காரி மகாசன்மான் யோஜனா என பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஷிண்டே கூறுகையில், விவசாயிகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கி வருகிறது. இதேபோன்ற ஒரு முடிவை மாநில அரசும் எடுத்துள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும். இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 1 கோடி விவசாயிகள் பயன்பெறுவர். மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியை சேர்த்தால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவியாக கிடைக்கும்

கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு மாநில அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.6,000 அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். இதன் காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,900 கோடி செலவாகும் என்றார்.

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 9 ஆண்டு பூர்த்திச் செய்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் 2019 இல் அறிமுகமானது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2,000 அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com