பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு  ஆதரவு - மம்தா பானர்ஜி!

பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு - மம்தா பானர்ஜி!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தமது காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை மாற்றிக்கொண்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி மத்தியில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று நினைத்த அரசியல் தலைவர்கள் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குப் பின் தங்களது நிலையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

சமீபகாலம் வரை மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்து தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்து வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சி திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும் அக்கட்சி மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு உதவி வந்த்தாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

2024 தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள பிராந்திய கட்சிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று இதுவரை கூறிவந்த மம்தா பானர்ஜி, இப்போது காங்கிரஸ் கட்சியையும் அதில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

பிராந்திய கட்சி வலுவாக உள்ள மாநிலங்களில் பா.ஜ.க.வால் ஒன்றும் செய்ய முடியாது. கர்நாடகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். பாஜக ஆட்சியில் கொடூரங்கள் நடைபெறுகின்றன. பொருளாதாரம் சீரழிந்துள்ளது. ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மல்யுத்த வீர்ர்களின் நியாயமான கோரிக்கைகள்கூட புறக்கணிக்கப்படுகின்றன என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ.க. 65 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. கிங் மேக்கர் என கருதப்பட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் 19 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்துள்ளது.

இந்நிலையில் தனது தேர்தல் உத்தியை தளர்த்திக் கொண்டுள்ள ம்ம்தா பானர்ஜி, மாநிலங்களில் செல்வாக்காகவும் வலுவாகவும் உள்ள கட்சிக்கு இதர கட்சிகள் தோள் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பா.ஜ.க.வை விரட்டி அடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

உதாரணமாக மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், . தில்லியில் ஆம் ஆத்மி, பிகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம், தமிழகத்தில் திமுகவும் காங்கிரஸும் வலுவாக உள்ளன. அந்தந்த இடங்களில் அவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள். அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் காங்கிரசும் இணைந்துள்ளது. அவர்களுக்கு இதர கட்சிகள் ஆதரவு தரவேண்டும் என்றார்.

உ.பி,, பிகார், ஒடிஸா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்த அரசியல் கட்சி வலுவாக இருக்கிறதோ அதற்கு முன்னுரிமை அளித்து இதர கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும். உதாரணமாக மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வலுவாக இருந்தால், காங்கிரஸ் ஆதரவு தருவதுடன், அது தனது

தொகுதியை வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள மாநிலங்களில் திரிணமூல் உள்ளிட்ட இதர கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்.

2024 தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டுமானால் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல்கட்சிகள் சில தியாகங்களை செய்தே ஆகவேண்டும்.

உதாரணமாக உ.பி.யில் அகிலேஷ் கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அங்கு அஜித் சிங் கட்சியும் இருக்கிறது. அங்கு காங்கிரஸ் போட்டியிடக்கூடாது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், அனைவரும் ஒருங்கிணைந்து திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்.

எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறதோ அந்த மாநிலங்களில் இதர அரசியல்கட்சிகளை ஒருங்கிணைத்து எப்படி செயல்படுவது என்பதை விவாதித்து முடிவு செய்யலாம். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு எதிரான முன்னணியில் காங்கிரஸும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிப்பிட்டார் மம்தா பானர்ஜி.

பெரியண்ணன் போல் செயல்படும் போக்கை காங்கிரஸ் கைவிட வேண்டுமா என்று கேட்டதற்கு, “நாட்டை பாதுகாக்கவும், நாட்டு மக்களை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் நாம் அனைவரும் ஒரே மாதிரியான விதத்தில் செயல்பட வேண்டும் என்றார் மம்தா பானர்ஜி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com