கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்த மம்தா, நவீன் அழைப்பு!

கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்த மம்தா, நவீன் அழைப்பு!

கடந்த வாரம் கொல்கத்தாவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். அதன் பின்னர் அளித்த பேட்டியில் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக புதிய அணி அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

புதிய அணி அமைப்பது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதாளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய அணி அமைக்கப்படும். தேர்தல் உத்தி பற்றி இப்போது வெளியில் சொல்லமாட்டோம். எங்களது ஒரே நோக்கம், பா.ஜ.க.வை வீழ்த்துவதுதான்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்க பயன்படுத்தி வருகிறது. பா.ஜ.கவுக்கு எதிராக எந்த கட்சி குரல் கொடுத்தாலும் அமலாக்கத்துறையினர், சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினரை அனுப்பி நடவடிக்கை என்ற பெயரில் பயமுறுத்துகின்றனர். அதே நேரத்தில் பிற கட்சியிலிருந்து பா.ஜ.க.வில் சேர்பவர்கள் மீது அவர்கள் ஊழல்வாதிகளாக இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

காங்கிரஸ் கட்சி முன்னர் செய்த வேலையை இப்போது பா.ஜ.க. செய்கிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்று அகிலேஷ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்று இரு தலைவர்களும் அழைப்பு விடுத்தனர்.

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை அவர்கள் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவது குறித்து ம்ம்தாவிடம் பேசியதாகவும் வேறு அரசியல் எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.

இதை மம்தாவும் ஆமோதித்தார். நவீன் பட்நாயக்குடன் நல்லுறவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிராந்திய கட்சிகள் வலுவாகவே இருக்கின்றன. மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் கூட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தே நாங்கள் பேசினோம் என்றார் அவர்.

எனினும் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத பிராந்திய கட்சிளை ஒருங்கிணைத்து தேசிய அளவில் புதிய அணியை உருவாக்குவதே அவரின் திட்டம் எனத் தெரிகிறது.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களையும் ம்ம்தா பானர்ஜி சந்திக்க திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போது மம்தாவும், குமாரசுவாமியும் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com