கடைசி நேரத்தில் ஆதரவு அளித்த மம்தா- காங்கிரஸ் வெற்றிக்கு கைகொடுக்குமா?

கடைசி நேரத்தில் ஆதரவு அளித்த மம்தா- காங்கிரஸ் வெற்றிக்கு கைகொடுக்குமா?

நேற்று மாலையுடன் முடிவடைந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க என இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. பெங்களூரில் ஊர்வலம், சிவமோகாவில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு முந்தைய நாள் இரவே பிரதமர் மோடி டெல்லி திரும்பிவிட்டார். எனினும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.கவின் தலைவர்களின் பிரச்சாரத்தினால் கடைசி நாள் பிரச்சாரம் விறுவிறுப்பாக இருந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பெங்களூர் புறநகர் பகுதிகளிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரு பசவனகுடி தொகுதியிலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மைசூருவிலும் கடைசிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

பா.ஜ.கவின் தேசியத் தலைவரான ஜெ.பி நட்டா பெல்லாரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் இருந்தார். இது தவிர தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், மராட்டிய மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை முல்கியில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பெங்களூரு தெற்கு மற்றும் சிவாஜி நகர் தொகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ராகுல் காந்தியும் ப்ரியங்கா காந்தியும் ஒரே மேடையில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுர்கியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது தவிர முதல்வர் வேட்பாளாரான சித்தராமையா, டி.கே. சிவக்குமார், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றார்கள். ஜனதா தளம் சார்பில் முன்னாள் முதல்வர் குமாரசாமி மங்களூருவில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், இதுவரை களநிலவரத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சி, கடைசி நேரத்தில் களமிறங்கியிருக்கிறது. எந்தக் கட்சிக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், பா.ஜ.கவுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று கர்நாடக வாக்காளர்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டுள்ள மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவியுமான மம்தா பானர்ஜி, கர்நாடக வாக்காளர்கள் நிலையான அரசுக்கும், வளர்ச்சியை முன்னெடுப்பவர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று

கேட்டுக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க மிகவும் ஆபத்தான கட்சி. பா.ஜ.கவுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம் என்றும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடைசி நேரத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக வந்துள்ள மம்தா பானர்ஜியின் வாய்ஸ், காங்கிரஸ் கட்சியினரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் ஜனதா தளத்திற்கு சென்று விடாமல் சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவேண்டும் என்கிற கட்சியினரின் எதிர்பார்ப்புக்கு மம்தாவின் வாய்ஸ் கைகொடுத்திருக்கிறது. வாய்ஸ் எடுபடுமா? ஒரு வாரத்தில் தெரிந்து விடும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com