மணிப்பூரில் குக்கி இன பெண்களுக்கு நடந்த வன்முறை:பிரதமர் பதிலளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

மணிப்பூரில் குக்கி இன பெண்களுக்கு நடந்த வன்முறை:பிரதமர் பதிலளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட இந்த பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து மெளனமாக இருந்து வருவது ஏன் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர் நாடாளுமன்றத்தில் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இந்த விவாகரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குக்கி இனப் பெண்கள் தொடர்பான விடியோ வெளியானதை அடுத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் நடந்துள்ள அத்துமீறல்கள் குறித்தும், வன்முறையை ஒடுக்க அரசு செயல்படாததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிகூட இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். மேலும் மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங்கிடம் இது குறித்து பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் வன்முறைகள் நடந்து வருகின்றன. நிலைமை மோசமானதற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். குக்கி இன பெண்கள் நிர்வாண விடியோ நெஞ்சை உலுக்குகிறது. மத்திய அரசு வேடிக்கை பார்க்கின்றனவா? பிரதமர் நரேந்திர மோடி கண்களை மூடிக் கொண்டு இருக்கிறாரா? இப்போது வெளியான படங்கள், விடியோக்கள் அவர்கள் கண்களை உறுத்தவில்லையா என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வாத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்படுமா? பிரதமர் மெளனம் கலைப்பாரா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து முழு விவாதம் நடத்தப்பட வேண்டும். அதற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் கோரிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். திரிணமூல் காங்கிரஸ் மற்றும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளன.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும். பிரதமர் பேச மறுத்து அதைத்தொடர்ந்து அமளி ஏற்பட்டால், அவரே பொறுப்பேற்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கூறினார்.பிரதமர் மன் கி பாதில் பேசியது போதும். இனி மணிப்பூர் பற்றி பேசட்டும் என்றும் அவர் கூறினார்.ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மணிப்பூர் சம்பவங்களை மாநில அரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நடைபெற்ற அவை அலுவல் குழுவில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார் என்று தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைக்கு இதுவரை 120 பேர் பலியாகியுள்ளனர்.

குக்கி இனப் பெண்கள் இருவர் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறி விடியோவில் வெளிவந்துள்ள சம்பவம் கடந்த மே 4 ஆம் தேதி நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விடியோவில் குற்றவாளியின் முகம் தெரியும் நிலையில் அவர்களைத் தேடிவருவதாக போலீஸார் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com