மணீஷ் சிசோடியாவின் மனைவி டெல்லி மருத்துவமனையில் அனுமதி!
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் மனைவி ஆட்டோ இம்யூன் கோளாறால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"சீமா சிசோடியா ஆட்டோ இம்யூன் கோளாறுகளில் ஒன்றான, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நோய்க்கான சிகிச்சைக்காக அவர் இந்திரபிரஸ்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கலால் கொள்கை வழக்கில் பிப்ரவரியில் ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் சிசோடியாவின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியைச் சந்தித்து, சிசோடியா குடும்பத்தினருக்குத் தமது அனைத்து ஆதரவையும் உறுதியளித்தனர்.
அப்போது சீமா சிசோடியா "மிகக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்" என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
“சீமாவை பாதித்திருப்பது மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய் என்பதால். அதில் மூளை மெதுவாக உடலின் கட்டுப்பாட்டை இழக்கிறது. அவர் வீட்டில் தனியாக இருக்கிறார். மணீஷ் தான் அவரைக் கவனித்துக்கொள்வார்" என்று கெஜ்ரிவால் கூறினார்.
சிசோடியாவின் மகன் படிப்பிற்காக வெளிநாட்டில் இருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.