தேர்தலுக்குப் பின் கூட்டணிக்கு தயார்: மாயாவதி!

மாயாவதி
மாயாவதி

பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் 26 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்து 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில், எந்த கூட்டணியிலும் சேராமல் இருந்துவந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, தேர்தலுக்குப் பின் இரண்டு அணியில் ஏதாவது ஒன்றில் கூட்டுவைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக சூசகமாக அறிவித்துள்ளது.

புதுதில்லியில் தமது கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கூட்டணி அரசில் சேருவது பற்றி ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணியே ஆதரிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வலிமையான அராஜகமான அரசைவிட சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்டுள்ள அரசுக்கே ஆதரவு அளிப்பது என்பதில் மாயாவதி உறுதியாக உள்ளதாக அவரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.விரைவில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புவதாக சமீபத்தில் மாயாவதி முன்பு கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிரான வகுப்புவாத சக்திகள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டு தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிவிட்டதாக மாயாவதி குற்றஞ்சாட்டினார்.  இதனால் கட்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டிருந்த்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவற்றில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வும் காங்கிரஸும் ஆட்சி செய்து வருகின்றன. இந்த மாநிலங்களில் இந்த இரு கட்சிகளுக்கு இடையேதான் முக்கிய போட்டி. தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே மும்முனைப் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

மாயாவதியின் அறிக்கையை பார்க்கும்போது காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. தலைமையிலான அரசில் இடம்பெற அக்கட்சி தயாராக இருப்பதையே குறிக்கிறது.2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ராஜஸ்தானில் 6 இடங்களையும், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தலா இரண்டு இடங்களையும் கைப்பற்றியிருந்தது.

தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிடாமல் இருக்க காங்கிரஸ் அரசை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரித்தது. ஆனால், ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் விலைக்கு வாங்கிவிட்டது. பதவி கிடைத்ததும் எங்கள் எம்.எல்.ஏக்கள் அங்கு ஓடிவிட்டனர். எதிர்காலத்தில் நாங்கள் ஆளும் அரசுடன் கூட்டணி வைத்துவிட்டால் இதுபோல் பதவிக்காக கட்சி மாறமாட்டார்கள்.  அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியும், கட்சியையும் பலப்படுத்த முடியும் என்றார் பகுஜன் கட்சித் தலைவர்.

தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி ஆகிய இரண்டில் எதில் கூட்டணி சேர பகுஜன் கட்சி தயாராக இருக்கிறது என்று கேட்டதற்கு, நாங்கள் இந்த கூட்டணியில்தான் சேருவோம் என்று இப்போது தெரிவிக்க விரும்பவில்லை. தேர்தலுக்கு பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com