இடைத்தேர்தல்: காங்கிரஸ் பிரச்சாரம் - கள ரிப்போர்ட் என்ன சொல்கிறது?

இடைத்தேர்தல்: காங்கிரஸ் பிரச்சாரம் - கள ரிப்போர்ட் என்ன சொல்கிறது?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்றுவரும் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் வரை இருதரப்பிலும் குழப்பங்கள் நிலவி வந்தன. காங்கிரஸ் திரும்பவும் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டாலும் யார் வேட்பாளர் என்பதை டெல்லி மேலிடம் முடிவு செய்ய வேண்டியிருந்தது.

காங்கிரஸ் வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். மூத்த மகனின் மறைவைத் தொடர்ந்து, இளைய மகன் போட்டியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இளங்கோவனுக்கு போட்டியிடுவதில் விருப்பமில்லை என்று முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

தற்போது வேட்பாளரும் முடிவாகி, கூட்டணி சம்பந்தப்பட்ட பிற சர்ச்சைகளும் முடிவுக்கு வந்துவிட்டன. நான்கு முக்கிய காட்சிகளோடு, 70 சுயேட்சைகள் போட்டியிட்டாலும் பிரதான போட்டி என்பது தி.மு.க கூட்டணிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்கும்தான் என்பது முடிவாகிவிட்டது.

தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி களம் காணுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பதால் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் திரும்பவும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் தி.மு.க கூட்டணியில் பெரும்பாலும் தி.மு.கவின் கூட்டணிக்கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.கவே நேரடியாக போட்டியிடுவதாக கருதி, தி.மு.க தொண்டர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளை செய்துவருகிறார்கள். காங்கிரஸ் கட்சி தொண்டர்களை வழி நடத்துவது தி.மு.க நிர்வாகிகள்தான்.

தொகுதி முழுவதும் வேட்பாளர் அறிமுகக்கூட்டம், வீடு தேடி பிரச்சாரம் செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகளின் கட்சிக்கொடியை காணமுடியவில்லை என்கிறார்கள். பத்து தி.மு.க கொடி இருந்தால், நடுவில் இரண்டு காங்கிரஸ் கொடி பறந்து கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுகின்றன என்பது உண்மைதான். பெரும்பாலான பிரச்னைகளில் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றன. பா.ஜ.க எதிர்ப்பு என்று வரும்போது அதுவே உரத்து ஒலிக்கிறது. பா.ஜ.க எதிர்ப்பு இல்லாவிட்டடால் சுரத்து குறைந்துவிடுகிறது.

ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிடும் என்றே தி.மு.கவின் கூட்டணிக்கட்சிகள் எதிர்பார்த்து இருந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஒருவேளை பா.ஜ.க போட்டியிட்டிருந்தால் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் களை கட்டியிருக்கும். அதிக எண்ணிக்கையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கும் என்கிறார்கள், உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com