மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் தோல்விகளும் துன்பங்களும்தான் அதிகம்: காங்கிரஸ்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில் தோல்விகளும் துன்பங்களும்தான் அதிகம் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், தவறான பொருளாதார கொள்கைகள், வெளிநாட்டு விவகாரங்கள், எல்லைப் பிரச்னை என பலவற்றை சொல்லலாம்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததுடன் அறியாமையால் மக்களை துன்பத்துக்கு ஆளாக்கினார் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
கர்நாடகத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததைப் போலவே 2024 மக்களவைத் தேர்தலிலும் மோடி அரசை மக்கள் தூக்கியெறிய வேண்டும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். 2029 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி மீண்டும் பிரதமரானார். இன்று மோடி அரசு 9 ஆண்டுக்கால ஆட்சியை பூர்த்தி செய்துள்ளது.
இந்த 9 ஆண்டுக்காலங்களில் தோல்விகள்தான் அதிகம். அதேபோல மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் எதேச்சாதிகார முடிவுகளை சகித்துக் கொண்டு மக்கள் வாழவேண்டி இருந்தது.
பல்வேறு வாக்குறுதிகளை அளித்து மோடி அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட சரிவர நிறைவேற்றவில்லை. எதையாவது காரணத்தைச் சொல்லி வாக்குறுதிகளை நிறைவேற்றாமலே காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமான இரண்டு மடங்காக உயரும் என்றார்கள். கறுப்பு பணத்தை ஒழித்துவிட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். ஆனால், நடந்தது என்ன? ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
இவை சில உதாரணங்கள்தான். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. பணமதிப்பீட்டு நடவடிக்கை பொருளாதாரத்தை சீரழித்தது. வங்கியில் வரிசையில் நிற்கும்போதே சிலர் உயிரிழந்தனர். இந்த துயரமான சம்பவத்தை யாரால் மறக்க முடியும். ஜி.எஸ்.டி.-யால் (கப்பார் சிங் டாக்ஸ்) வர்த்தகர்கள் வெகுவாக
பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால், யானை பசிக்கு சோளப்பொறி எம்மாத்திரம். அக்னிவீர் திட்டம் இளைஞர்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டது. இதை எதிர்த்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்று காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
மோடி ஆட்சியில் எதிர்த்து குரல் எழுப்புபவர்கள் நசுக்கப்பட்டனர். மக்களை அச்சுறுத்துவதும், பணபலத்தால் அதிகாரத்தை விலைக்கு வாங்குவதும், நண்பர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும்தான் மோடி அரசின் சாதனை என்று சொல்லலாம்.
அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பணபலத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கொல்வது அவர்களுக்கு கைவந்த கலை.
சீனாவுடன் எல்லைப் பிரச்னை நீடிக்கிறது. ஆனால், எந்த பிரச்னையும் இல்லை என்பதுபோல் நாள் முழுவதும் ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது. சீனா வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்கிறார்கள். ஆனால், உண்மையில் நமது நிலத்தில் கண்காணிப்பை தடுத்து நிறுத்தி வருகிறது. சீனாவில் தாக்குதலுக்கு நமது வீர்ர்கள் பலியாகின்றனர். ஆனால், பிரதமர்
மோடி சிவப்பு நிற கோட் அணிந்து சீனாவுக்கு கம்பளம் விரிக்கிறார். இது கோழத்தனம் இல்லையா?
மோடி அரசின் 9 ஆண்டுக்கால தோல்விகளை ஒரு புத்தகமாகவே போடலாம். மோடியின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். கர்நாடக தேர்தல் முடிவுகள் அதற்கு சான்றாகும். பிரதமர் மோடியை மக்கள் நிராகரிக்கத் தொடங்கிவிட்டனர். தெற்கிலிருந்து தொடங்கிய இந்த அலை நாடு முழுவதும் எதிரொலிக்கும். வரும் மக்களவைத் தேர்தல் பா.ஜ.க.வுக்கும் மோடிக்கும் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.