
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் அவர்கள் தனக்கு ஓட்டு போட்டு விடுவார்களா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையான நிலையில், அப்படி பேசியது ஏன் என சீமான் கொந்தளிப்பாக விளக்கம் அளித்து பேசியுள்ளார்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில நாட்களுக்கு முன் கூறிய கருத்திற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் கூடிய அவரது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய தொகுதி பொறுப்பாளர்களுடன் தனித் தனியாக ஆலோசானை நடத்தினார் சீமான். மேலும் கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பணிகள், தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், தனக்கு அவர்கள் வாக்களிப்பதில்லை என்றார். மேலும் அவர் பேசுகையில் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ்க்கு உதவி செய்த திமுகவுக்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மாறி மாறி ஓட்டு போடுவதால் ஆதங்கத்தில் அப்படி பேசியதாகவும் சீமான் விளக்கம் அளித்தார்.