தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டில் ஸ்திரத் தன்மையை நிரூபித்துள்ளது: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பீகாரைச் சேர்ந்த கூட்டணிக் கட்சி எம்.பி.க்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் நாட்டில் ஸ்திரத் தன்மையான ஆட்சியைத் தரும் சக்தியாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.

அடுத்த மக்களவைத் தேர்தல் வருவதற்கான இடைப்பட்ட நேரத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் தொகுதியில் அதிகபட்ச மக்களைச் சந்திந்து மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துக்கூறி, பிரபலப்படுத்துமாறும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 2014 ல் ஆட்சியைப் பிடித்தப்போது மக்களுக்கு அளித்த  வாக்குறுதிகள் அனைத்தையும் தமது அரசு நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஸ்திரத் தன்மையின் சக்தியாக இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாவதற்கு முன்பு நாட்டில் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாது இருந்ததாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான பிறகே ஸ்திரத் தன்மைக்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் நன்மைக்காக பாஜக பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில் மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகள் பலமில்லாத நிலையில் இருந்தபோதிலும் அவை முக்கிய பதவிகள் வகிக்க பாஜக காரணமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக பாஜக ஆதரவு அளித்ததை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். ஆனால், நிதிஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியான, ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கிறார் என்றார் பிரதமர் மோடி.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பேசினர்.

2024 மக்களவைத் தேர்தலையொட்டி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.பி.க்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கிலும், தேர்தல் வியூகத்தை வகுக்கும் நோக்கிலும் கடந்த சில நாட்களாக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

முதல் கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலம், மத்திய மற்றும் கிழக்குப் பகுதி எம்.பி.க்கள் 45 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு தென்மாநில எம்.பி.க்களுடன் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் மொத்தம் உள்ள மக்களவைத் தொகுதிகளை 11 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு குழுவினரிடமும் பிரதமர் மோடி பேசி வருகிறார். தில்லி, பஞ்சாப், இமாச்சலம், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றினார்.

சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் மூலமும் நேரிலும் மக்களைச் சந்தித்து ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை எடுத்துரைக்குமாறு எம்.பி.க்களை அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com