புதிய நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு வேண்டுகோள்!

புதிய நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு வேண்டுகோள்!

புதிய நாடாளுமன்ற வளாகம் திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தில்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற வளாகம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டடத்தை இடிக்காமல் பழைய கட்டடத்தையொட்டி 64,000 சதுர மீட்டர் பரப்பளில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில ரூ.20,000 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது புதிய நாடாளுமன்ற வளாகப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் வருகிற 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, புதிய நாடாளுமன்ற வளாகத்தை திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்திய தேசத்தின் தலைவர் குடியரசுத் தலைவர்தானே திறந்து வைக்க வேண்டும். அப்படியிருக்கையில் ஏன் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்? என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவரை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக கூட்டாக அறிவித்துள்ளன.

இதையடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, புதிய நாடாளுமன்ற வளாக திறப்புவிழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய நாடாளுமன்ற வளாகத்தை திறந்துவைக்க பிரதமர் நரேந்திர மோடியை மக்களவைத் தலைவர் அழைத்துள்ளார். அதன் பேரில் பிரதமர் மோடி அந்த வளாகத்தை திறந்துவைக்க உள்ளார். இது குடியரசுத் தலைவரையோ அல்லது குடியரசு துணைத் தலைவரையோ அவமதிப்பதாகாது.

புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழா வரலாற்று நிகழ்ச்சியாகும். இதை அரசியலாக்கக்கூடாது. தேவையில்லாத ஒன்றை பிரச்னையாக்க வேண்டாம்.

எனவே தயவு செய்து எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com