நிதீஷ்குமாருடன் கருத்து வேறுபாடு இல்லை: தேஜஸ்வி யாதவ்!
பிகார் முதல்வர் நிதீஷ்குமாருடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக ஒன்றாக செயல்பட்டு வருகிறோம் என்று துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
ரயில்வே வேலைக்கு நிலம்பெற்றதான வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் லாலு குடும்பத்தினர் மற்றும் மகன் தேஜஸ்வியின் வீட்டில் சோதனை நடத்திய சில தினங்களில் அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தேஜஸ்வியாதவ் சட்டப்பேரவையில் பேசுகையில், “முதல்வர் நிதீஷ்குமார் என்மீது நம்பிக்கை வைத்துள்ளார். அவரது நம்பிக்கைக்கு உரியவகையில் நான் செயல்பட்டு வருகிறேன். அவருக்கு பிரதமராகும் விருப்பமும் இல்லை. எனக்கும் உடனடியாக முதல்வராக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. நாங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே மகிழ்ச்சியாக பணியாற்றி வருகிறோம். எதிர்க்கட்சியினர் என்று கூறிக்கொள்ளும் சிலர் எங்களுக்குள் கருத்துவேறுபாட்டை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்களின் முயற்சி ஒருபோதும் பலிக்காது. பா.ஜ.க.வுடன் உறவை முடித்துக் கொண்டதற்காக அவருக்கு நிதீஷ்குமாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமது கட்சியினரிடம் பேசிய முதல்வர் நிதீஷ்குமார், “எனக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை. எனவே தொண்டர்கள் யாரும் அதற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
வரும் மக்களவைத் தேர்தலுக்குள் எதிர்க்கட்சியினரை ஒன்று சேர்க்கும் பணியில்தான் நிதீஷ்குமார் ஈடுபட்டு வருகிறாரே தவிர அவருக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை என்று தேஜஸ்வியாதவும் கூறிவந்தார்.
சமீபகாலமாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர்கள் சிலர், முதல்வர் பதவியை நிதீஷ்குமார் விரைவில் தேஜஸ்வி யாதவுக்கு விட்டுத்தர வேண்டும் என்று கோரியதுடன் அவருக்கு நிர்பந்த்த்தை ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். எங்களுக்குள் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளது பிகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இதனிடையே நிதிஷ்குமாரின் சதி வலையில் தேஜஸ்வி சிக்கிவிட்டதாக பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர். அரசியலில் காய்களை நகர்த்துவதிலும், கூட்டணியை மாற்றிக்
கொள்வதும் நிதீஷ்குமாருக்கு கைவந்த கலையாகும். இதன் காரணமாகவே தேஜஸ்வி முதல்வர் பதவி மீது எனக்கு ஆசையில்லை, நிதீஷ் தலைமையின் கீழ் பணி செய்யத் தயார் என்று கூறிவருவதாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் அரவிந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார்.