சுவர் விளம்பரமில்லை, கூகிள் விளம்பரம்; பிட் நோட்டீஸ் இல்லை, ஒன்லி வாட்ஸ் அப் மெசேஜ்! - அசத்தும் அரசியல் விளம்பரங்கள்!
பிட் நோட்டீஸ், சுவர்களில் எழுதுவது, நாளேடுகளில் விளம்பரம் தருவது, வீடு தேடி வந்து கும்பிடு போடுவது.. இதெல்லாம் பழைய ஸ்டைல். தேர்தல் வந்தால் தெருவுக்கே வராமல் பிரச்சாரத்தில் அசத்துவது எப்படி என்பதில் நாளுக்கு நாள் பா.ஜ.க கட்சி மாஸ்டராகி வருகிறது.
இணைய வழி விளம்பரங்கள், வாட்ஸ் அப் வழியாக வாக்காளர்களை துரத்துவது.. இதுதான் பா.ஜ.கவின் தேர்தல் யுக்தி. கடந்த இரண்டு மாதங்களில் இணைய விளம்பரங்களுக்கு பா.ஜ.க கொடுத்துள்ள முக்கியத்துவத்தை பார்த்தாலே புரிந்துவிடும்.
மேகாலாயா, நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட 3 வடகிழக்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டன. பிரச்சாரம் ஆரம்பமான முதல் நாள் தொடங்கி அடுத்து வந்த 30 நாட்களுக்கும் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான கூகிள் விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன. அத்தனையும் பா.ஜ.க கூட்டணி அரசுகளின் சாதனைகளை பேசும் விளம்பரங்கள்.
ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டம் நடத்தி, ஆட்களை திரட்டி செலவழித்திருந்தால் கோடிக்கணக்கில் செலவாகியிருக்கும். கூகிள் விளம்பரங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை பரப்பி, பல பேரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். தேர்தல் செலவிலும் சிக்கனமாக இருந்திருக்கிறார்கள். மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க கட்சி குறைந்தபட்சம் 70 லட்சங்களை இணைய விளம்பரங்களுக்காகவே செலவழித்திருக்கின்றன.
மேகலாயா மாநிலத்தின் பா.ஜ.க தலைமை, 760 கூகிள் விளம்பரங்களை தந்திருக்கிறது. இதன் மூலம் 34 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநில பா.ஜ.க தலைமையோ, இதே ரீதியில் 372 விளம்பரங்களை தந்து, 32 லட்ச ரூபாயை செலவழித்திருக்கிறது. நகாலாந்து மாநிலத்தின் பா.ஜ.க 14 லட்ச ரூபாய் செலவில் 465 விளம்பரங்களை தந்திருக்கிறது.
பா.ஜ.க தவிர பிற கட்சிகளும் இணைய வழி விளம்பரங்களை தந்திருக்கின்றன. குறிப்பாக திரிணமுல் காங்கிரஸ், ஐபேக் மூலமாக 25 லட்சங்களை செலவழித்து 410 கூகிள் விளம்பரங்களை தந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வரவில்லையென்றாலும் இடதுசாரிகளுக்கு ஆதரவான களத்தில் கால் பதிக்க முயற்சி செய்திருப்பது தெரிகிறது.
திரிபுரா உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்கள். ஆனால், இணைய வழி விளம்பரத்தில் கவனம் செலுத்தியது போல் தெரியவில்லை.
தமிழ்நாடு போன்ற தொழில்நுட்பத்தில் முன்னேறிய மாநிலங்களே நேரடியாக வாக்காளர்களை பார்த்து, கும்பிடு போடும் யுக்தியைத்தான் பின்பற்றிவருகின்றன. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் கூட இணைய வழி விளம்பரங்கள் மீது நம்பிக்கை வைத்து, பா.ஜ.க வெற்றி பெற்று காட்டியிருக்கிறது