‘சித்துவும் சிவாவும் சண்டை போடாமல் இருந்தால் நோபல் பரிசு’ அண்ணாமலை அறிவிப்பு!
சமீபத்தில் நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைக்கும் தகுதியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இன்று சித்தராமையா கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும், சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களோடு எட்டு அமைச்சர்களும் பதவி ஏற்று இருக்கிறார்கள். இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் பதவி ஏற்பு விழா குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் காங்கிரஸ் அரசு ஒரு வருடத்தில் சீட்டு கட்டு போல சரிந்து விழும். முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் வரும் 2024ல் நடைபெற உள்ள பார்லிமெண்ட் தேர்தலுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாவிட்டால் இவர்கள் இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.