தேர்தலில் போட்டியிடவில்லை: மெஹ்பூபா திடீர் அறிவிப்பு!

தேர்தலில் போட்டியிடவில்லை: மெஹ்பூபா திடீர் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவு அமல்படுத்தப்படாதவரை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவர் மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார். இந்த முடிவு முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால், உணர்வுபூர்வமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் நடத்த மத்திய அரசு பயப்படுகிறது. தேர்தல் நடந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்துவிட்டால் தனது மறைமுக திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு அஞ்சுகிறது.

2019 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது. அதன் பின் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு மீண்டும் அமல்படுத்தப்படாத நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன். நான் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற போதெல்லாம் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் சட்டம், இந்திய அரசியல் சட்டம் ஆகியவற்றின் பெயரிலேயே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டேன். மீண்டும் அதுபோன்ற நிலை வந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவேன். இது முட்டாள்தளமான முடிவல்ல, உணர்ச்சிபூர்வமான முடிவாகும்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள். அதுபற்றி இப்போது ஏதும் உறுதியாக கூறமுடியாது.

அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கூறிவரும் குப்கார் கூட்டணி ( மக்கள் கூட்டணி) சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் உங்கள் கட்சியின் நிலை என்ன என்று கேட்கிறீர்கள். இது குறித்து முன்கூட்டியே கருத்து தெரிவிப்பது சரியானதாக இருக்காது.

தேர்தலில் கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுவதா அல்லது தனித்தனியாக போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் நாங்கள் விவாதிக்கவும் இல்லை முடிவு செய்யவும் இல்லை. இனிமேல்தான் இது குறித்து முடிவு எடுக்க முடியும்.

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. பஞ்சாயத்து தேர்தலை நடத்தியதன் மூலம் அங்கு ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டதாக கூறமுடியுமா. தேசிய மாநாட்டுக் கட்சி நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லா காலத்திலிருந்தே பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பஞ்சாயத்து தேர்தல்தான் ஜனநாயகத்துக்கான சோதனைக்களமா. அப்படியானால் பிரதமரும் உள்துறை அமைச்சரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பஞ்சாயத்து தேர்தல் ஒருபோதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மாற்று ஆகாது.

சட்டப்பேரவை தேர்தலை நடத்த அரசு பயப்படுகிறது. தேர்தல் நடைபெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்றால் தங்களின் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என மத்திய அரசு நினைக்கிறது. தேர்தல் நடந்தால் முடிவு எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தேர்தலை நடத்த தயங்குகிறார்கள் என்றார் மெஹ்பூபா முப்தி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com