தேஜஸ்வி யாதவ் பதவி விலகக் கோரி பிகார் பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி!

தேஜஸ்வி யாதவ் பதவி விலகக் கோரி பிகார் பேரவையில் எதிர்க்கட்சிகள் அமளி!

பிகார் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை ஊழல் விவகாரத்தில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை அடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சியின் மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல், அவையில் அமளியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

பிகார் சட்டப்பேரவை காலையில் கூடியதும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடியபோதும் பா.ஜ.க.வினர் தேஜஸ்வி பதவி விலக கோரி அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பேரவைத் தலைவர் இருக்கையை நோக்கி நாற்காலியை தூக்கிக்கொண்டு வந்தனர். இதையடுத்து அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. தன்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று முன்பே எதிர்பார்த்ததாக துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

இது ஒன்றும் முதல் குற்றச்சாட்டு அல்லது. இன்னும் இதுபோல் பல குற்றச்சாட்டுகள் என்மீது வைக்கப்படும். நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை தொடர்பான வழக்கு பழைய பிரச்னை. நான் அமைச்சரான பிறகு என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றார் தேஜஸ்வி.

பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகுமார் சின்ஹா பேசுகையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், துணை முதல்வர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோது அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அமைச்சரவையில் நீடிப்பது சரியல்ல. இது மக்களை ஏமாற்றும் வேலையாகும். இதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஊழல் அமைச்சரை வெளியேற்றும் வரை விடமாட்டோம் என்று தெரிவித்தார்.

ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவரான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தபோது நிலம் பெற்றுக்கொண்டு தனக்கு வேண்டியவர்களுக்கு விதிகளை மீறி ரயில்வேயில் பணி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக லாலு பிரசாத், அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது சிபிஐ அண்மையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தமது கட்சியின் 27-வது ஆண்டு கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத், மத்திய அரசு தமது குடும்பத்தினர் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மத்திய அரசு வழக்கு என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். மேலும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com