ஓபிஎஸ் - டி.டி.வி. தினகரன் கூட்டணி? நதியில் வெள்ளமும், கரையில் நெருப்பும் இருந்தாலும் பாதையில் எந்த தடையுமில்லை!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மோசமான தோல்வி, அ.தி.மு.கவில் நடைபெற்று வந்த ஒற்றைத் தலைமை சர்ச்சை போன்ற காரணங்களால் ஓராண்டு காலம் அமைதியாக இருந்து வந்த தினகரன், தற்போது அதிரடி அரசியலில் இறங்கியிருக்கிறார். மதுரை ஏர்போர்ட்டில் அ.ம.மு.க தொண்டர் எடப்பாடியை எதிர்த்து கோஷமிட்ட சம்பவம் தொடர்பாக எடப்பாடி மீது தி.மு.க அரசு வழக்கு தொடர்ந்திருப்பதும் தினகரன் தரப்பை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்பட 6 நிர்வாகிகள் மீது 5 பிரிவின் கீழ் மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தினகரன், எடப்பாடி கண்ணியத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். எங்களுடைய கட்சிக்காரர் உண்மையைத்தான் வெளிப்படுத்தினார். இதற்கு ஏன் கோபப்படவேண்டும் என்று தன்னுடைய வழக்கமான பாணியில் கருத்து தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க வலுப்பெற்றிருப்பதை தொடர்ந்து அ.ம.மு.க ஆதரவாளர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ராயப்பேட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.கவை தவிர்த்து விட்டு தி.மு.க எதிர்ப்பில் தினகரன் ஆதரவாளர்கள் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். தீயசக்தி தி.மு.க.வின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே அக்கட்சியின் உட்கட்சி பூசலால் எழுந்துள்ள மோதலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் மோதலில் ஈடுபட்ட திமுகவினர் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா என்று தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அடுத்து சென்னையில் தனியார் பேருந்துகள் அறிமுகப்படுத்தும் உத்தரவையும் விமர்சித்திருந்தார். பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க தி.மு.க. அரசு திட்டமிடுவதாக ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குற்றம் சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சரே கூறியிருப்பதால் தனியார் மயமாக்கம் உறுதியாகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
எடப்பாடி எதிர்ப்பிலும் தினகரன் தீவிரமாகியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் நிரந்தரமாக கொடுக்கப்பட்டாலும் கட்சி பலவீனம் அடைந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததற்கு முழு முதல் காரணமே எடப்பாடி பழனிசாமியின் சுயநலம்தான். பன்னீர்செல்வத்தை ஒதுக்கிவிட்டு செயல்பட்டதால்தான் அ.தி.மு.க பலவீனமாகிவிட்டது. எனவே, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணையும்போது கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும். அதை ஒ. பன்னீர்செல்வமும் விரும்புவதால் அவரை விரைவில் சந்திப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். விரைவில் சசிகலாவையும் சந்திப்பேன் என்று தெரிவித்திருப்பதால் ஓ.பி.ஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். நதியில் வெள்ளம், கரையில் நெருப்பு, நடுவே இறைவனின் சிரிப்பு இருந்தாலும் அது தெய்வீக சிரிப்புதான். எத்தனை சோதனைகள் வந்தாலும் ஓ.பி.எஸ் அணி செல்லும் பாதையில் எந்த சிக்கலுமில்லை.