கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் – டிடிவி.தினகரன் ஆர்ப்பாட்டம்!

கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் – டிடிவி.தினகரன் ஆர்ப்பாட்டம்!

மிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்றாகும். இந்தக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி, பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தேனி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அதோடு, இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ஓபிஎஸ்சும் நானும் பதவிகளுக்காக இணையவில்லை. அம்மாவின் தொண்டர்கள் மடியில் கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிகுந்தவர்கள். இங்கே கூடியிருப்பது தொண்டர்படை. ஆனால், அங்கிருப்பதோ குண்டர் படை. டெண்டர் படை. டெண்டருக்காக ஒன்று கூடியவர்கள்.

அவர்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் சந்தில் சிந்துபாடி, சிந்துபாத் வேலை பார்ப்பார்கள். அச்சாணி முறிந்து போனவர்கள், அச்சாணியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஒரு இயக்கத்தின் உண்மையான அச்சாணி, விசுவாசம் கொண்ட தொண்டர்கள்தான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. விசுவாசம் என்றால் என்னவென்று அவர்கள் கண்களுக்குத் தெரியாது. காரணம், துரோகத்தைத் தவிர, வேறு எதையும் அறியாதவர்கள் அவர்கள். கடந்த அதிமுக ஆட்சியில் கொடநாடு வழக்கு சம்பந்தமான சாட்சிகள் அழிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை விரைந்து நடத்தி, குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்” என்று  அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “கொடநாடு பங்களாவில் கொள்ளை, கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும். இல்லை என்றால் இதுவே ஒரு மக்கள் போராட்டமாக வெடிக்கும். இன்று மக்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும். ஆட்சிக்கு வந்தால் 90 நாட்களுக்குள்  கொடநாடு கொள்ளை, கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் முதலமைச்சர்.ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆன நிலையில், கொடநாடு வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், “சம்பவம் நடைபெற்ற இரவு யார் மின் இணைப்பைத் துண்டித்தார்கள்? மின் இணைப்பை துண்டிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது யார்?” என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.  

நீண்ட காலம் தனித்தனியே பிரிந்திருந்த ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, அக்கட்சியைச் சேர்ந்தவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com