நாடாளுமன்ற தேர்தலுக்கு வெள்ளோட்டம் – காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல்?
2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னர் பா.ஜ.க, 5 செமி பைனல் ஆட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடப்பாண்டில் எதிர்கொள்கிறது. இதில் கர்நாடகா தேர்தல் பா.ஜ.கவுக்கு கைகொடுக்கவில்லை. வரப்போகும் ராஜஸ்தான் மாநில தேர்தலில் ஆட்சிமாற்றத்தை எதிர்பார்க்கிறது.
இந்நிலையில் காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனைகளில் டெல்லி வட்டாரங்கள் இறங்கியிருக்கின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் சட்டமன்றத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டால், பிரச்சாரத்தில் பெரிய அளவில் கைகொடுக்கும் என்று தேசியத் தலைமை நினைக்கிறது.
காஷ்மீரில் அமைதி நிலை திரும்பியிருக்கிறதா? தேர்தல் நடத்துமளவுக்கு சுமூக நிலை திரும்பியிருக்கிறதா? ஆர்டிகிள் 370 திரும்ப பெறப்பட்ட பின்னர், தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி உள்ளிட்டவை களையெடுப்பில் தீவிரமாக இறங்கின. காஷ்மீரில் இருந்த பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் முடுக்கப்பட்டார்கள். பொது சொத்துக்கு பாதுகாப்பளிக்கும் விதிகளின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு, சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடிந்தது. அரசின் அதிரடி நடவடிக்கைகள் பிரிவினைவாத இயக்கங்களை முற்றிலுமாக முடக்கிவிட்டன. இயக்கங்களில் ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் கணிசமாக குறைந்து போயின.
ராஜோரி, பூன்ச் மாவட்டங்களின் எல்லையில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், எல்லையில் நடைபெற்று வந்த ஊடுருவல்ளை தடுக்க முடியவில்லை. ட்ரோன்களின் மூலம் நடைபெற்ற ஆயதக்கடத்தலும் அதிகரித்தது.
எல்லையோரத்தில் ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்க்கும்போது, அவை அனைத்தும் வழக்கமான பயன்பாட்டில் இல்லாதவை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று தெரிய வந்திருக்கின்றன. இன்றைய நிலையில் தீவிரவாதிகளின் ஊடுருவலை விட புதிதாக ஊடுருவ ஆரம்பித்திருககும் நவீன ரக துப்பாக்கிகள்தான் இந்தியாவுக்கு தலைவலியாகிவிட்டன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறிய நாள் முதல் காஷ்மீர் எல்லைகளில் ஊடுருவல்கள் அதிகமாகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எம்4 கார்பைன், எம்429 துப்பாக்கிகள், எப்என் 509 பிஸ்டல் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.
தரைமட்டத்திலிருந்து 4000 முதல் 15000 வரை உயரத்தில் உள்ள பூன்ச் போன்ற மாவட்டங்களை முழுமையாக கண்காணிப்பது என்பது இயலாத விஷயம். மேற்கு
எல்லையானது ஏராளமான மலைகளால் சூழப்பட்டும், அடர்த்தியான காடுகளாலும் ஆனது. காஷ்மீரின் மற்ற பகுதிகளை விட கலாச்சார ரீதியாக இது பாகிஸ்தானோடு நெருக்கமானது. பொதுமக்களிடமிருந்து தீவிரவாதிகளை பிரித்துப் பார்ப்பதும் சவலான விஷயம்.
தேர்தலில் பங்கேற்பதில் பா.ஜ.க மட்டுமல்ல பிற கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் அப்துல்லாவிடம், காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதா என்னும் கேள்விக்கு, அதுவொரு மில்லியன் டாலர் கேள்வி என்றார். காஷ்மீரில் தேர்தல் நடத்துவது குறித்து யாராலும் ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலைதான் நீடிக்கிறது.