கர்நாடகாவில் வலுக்கும் கோஷ்டி பூசல் - அதிருப்தியாளர்களை திருப்திப்படுத்த முடியாது என்று அண்ணாமலை பேட்டி!
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் பா.ஜ.க தரப்பில் வெளியாகி நான்கு நாட்களாகிவிட்டன. இதுவரை 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவித்த நாள் தொடங்கி, தினமும் கோஷ்டி மோதல்கள் தொடர்கின்றன. மூத்த பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் முன்னாள் முதல்வர்களுக்கும் டிக்கெட் மறுக்கப்பட்டிருப்பதால் அதிருப்தி உச்சத்தில் இருக்கிறது.
பா.ஜ.கவின் பல மூத்த நிர்வாகிகளை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று டெல்லி தலைமை கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுதான் மாஜி தலைவர்களை கோபப்படுத்தியிருக்கிறது. பா.ஜ.கவின் மூத்த தலைவரான கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து தேர்தல் அரசியலில் இருந்த ஓய்வு பெறுவதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். அவரோடு முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கும் டிக்கெட் தரப்படவில்லை.
இது குறித்து தேர்தல் பொறுப்பாளரான அண்ணாமலையிடம் பத்திரிக்கையாளர்கள் விளக்கம் கேட்டபோது, டிக்கெட் கிடைக்காதவா்கள் அதிருப்தி அடைவது எப்போதும் நடப்பதுதான். போட்டியிடுவதற்கு நிறைய பேர் தயாராக இருந்தாலும் ஒரு தொகுதியில் ஒருவர் மட்டுமே போட்டியிட முடியும். டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு கட்சி நிச்சயமாக வேறு பொறுப்புகளை வழங்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் முதல்வர் பசவராஜ் பொம்மை இறங்கியிருக்கிறார். முதல் கட்டமாக 189 வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியல் வரவிருக்கின்றன. அதில் உங்கள் பெயர் இடம் பெற வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் சமாதானம் பேசுகிறார்.
ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களின் பெயர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது, முதல்வர் பசவராஜ் தலைமையிலான தேர்தல் பணிக்குழுதான். ஆனால், வேட்பாளர்களை டெல்லி மேலிடம்தான் முடிவு செய்து பட்டியலை அனுப்பி வைத்திருக்கிறது.
பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பில்லை. அதிருப்தியில் உள்ளவர்களை நிச்சயம் சமாதானப்படுத்திவிடுவோம். ஆகவே, அவசரப்பட்டு யாரும் எந்த முடிவையும் எடுத்துவிடவேண்டாம் என்று கர்நாடக முதல்வர் கட்சியினரை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பா.ஜ.கவில் வேட்பாளர் பட்டியல் தொடர்பாக எழுந்துள்ள மோதல் நிலைமை குறித்து கர்நாடக காங்கிரஸ் விமர்சனம் செய்து வருகிறது.‘ எடியூரப்பா, ஈசுவரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் போன்றவர்கள்தான் பா.ஜ.க என்னும் செடிக்கு தண்ணீர் ஊற்றி, உரமிட்டு கட்சியை வளர்த்தார்கள். ஆட்சியில் அமரவைத்தார்கள். அவர்களையெல்லாம் டெல்லி மேலிடம் அலட்சியப்படுத்தியுள்ளது.
வயதான மாடுகளை கோசாலையில் விட்டு இருக்கலாம். நேரடியாக கசாப்பு கடைக்கு அனுப்புவது சோகம் என்றும் கிண்டலடித்திருக்கிறது.
கொதித்துப் போயுள்ள ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா போன்றவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை பா.ஜ.க மேலிடம் தொடர்கிறது. தமிழ்நாட்டில் அமைதியாக இருக்கும் பா.ஜ.க நிர்வாகிகளுக்கு கூட ஆளுநர் பதவிகள் தரப்படுகின்றன. ஆனால், கர்நாடகாவில் கட்சிக்காக உழைத்து, பா.ஜ.கவை ஆட்சிக்கு கொண்டு வந்த பல தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று விமர்சனம் எழுந்திருக்கிறது.