PayCM - காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை வைரலாக்கிய சுனில்!

PayCM - காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை வைரலாக்கிய சுனில்!

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். ஒரு தேசியக் கட்சியின் தலைவி, வட இந்திய மாநிலத்தில் பிரச்சாரத்தில் இருந்தார். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தில் 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மூடிய காரில் புறப்பட்டவரை தடுத்து நிறுத்திய அவரது கட்சியின் அரசியல் ஆலோசகர், திறந்த காரில் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். கோபப்பட்ட தலைவி, முடியாதென்று மறுத்துவிட்டு கிளம்பிவிட்டார். மறுநாள் அவரை சந்தித்த அரசியல் ஆலோசகர், திறந்த காரில் பயணம் செய்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய அரசியல் லாபம் குறித்து ஒரு மணி நேரம் விளக்கினாராம். அதில் அசந்து போன தலைவி, பின்னாளில் அரசியல் ஆலோசகரை கேட்காமல் எதையும் செய்ததில்லையாம்.

திறந்த காரில் சென்றிருந்தால் அப்படியென்ன பெரிய வெற்றி கிடைத்திருக்கும்? அதெல்லாம் தொழில் ரகசியம் என்கிறார்கள். 15 ஆண்டுகால இந்திய அரசியல் அரசியல் ஆலோசகர்களை சுற்றித்தான் மையம் கொண்டிருக்கிறது. ஒரு கட்சிக்காக வேலை செய்து ஆட்சியில் அமர வைத்த அதே அரசியல் ஆலோசகர், எதிர்க்கட்சிகளுக்காக வேலை செய்து அதே கட்சியை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் பணியையும் செய்து முடிக்கிறார். பொலிடிகல் புரபொஷனல்ஸ்!

கர்நாடாகாவிலும் இது தான் நடந்திருக்கிறது. PayCM பிரச்சாரம் கடந்த ஓராண்டாக கர்நாடகா மாநிலத்தில் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்திருக்கிறது. பே சிம் என்பது பா.ஜ.க முதல்வர் ஒரு கமிஷன் அரசை நடத்தி வருகிறார் என்பதையே பிரச்சாரத்தில் முன் வைத்தது. 40 சதவீதம் கமிஷன் கொடுங்க. ஆர்டர் எடுத்துக்கோங்க என்று பரப்பப்பட்ட மீம்ஸ் முதல் முதல்வரை நினைவுப்படுத்தும் அரசியல்வாதிக்கு கமிஷன் பணத்தில் குளிப்பாட்டு வீடியோ விளம்பரம் வரை அத்தனையும் கர்நாடக பிரச்சாரத்தில் எடுபட்டிருக்கிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்குப் பின்னால் சுனில் என்கிற அரசியல் ஆலோசகர் இருந்திருக்கிறார். சுனில், தமிழ்நாட்டு அரசியலிலும் பரிச்சயமான பெயர்தான். தி.மு.க, அ.தி.மு.க என அனைத்து முன்னணி கட்சிகளுக்கும் அரசியல் ஆலோசகராக இருந்திருக்கிறார். பா.ஜ.கவுக்கு கூட சில காலம் வேலை செய்திருக்கிறார். சென்ற ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருக்கு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வரும் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதல் முறையாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான பணிகளை களத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறது. வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் உட்கார்ந்து கொண்டு இறுதி செய்யாமல், களத்திலிருந்து பேசுபவர்களின் குரலுக்கு முதல் முறையாக செவி சாய்த்திருக்கிறது. தொகுதி வாரியாக கணக்கெடுப்பு, வார்டு வாரியாக வாக்காளர்களின் மனவோட்டத்தை அலசுவது, வேட்பாளர் தேர்வில் காட்டியகறார் தன்மை என சுனிலின் பங்களிப்புகள் அதிகம். ஓராண்டாகவே காங்கிரஸ் கட்சி பிரச்சாரங்களில் முன்னிலை வகிப்பதற்கு சுனில் தீட்டிக்கொடுத்த திட்டங்களே காரணம் என்கிறார்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்.

முதல் ரவுண்டில் பே சிஎம் கோஷம் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகமான ஆரம்பத்தை கொடுத்தாலும், சுனில் டீம் முன்வைத்த இரண்டாவது கோஷம்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. காதுல பூ என்னும் கவர்ச்சிகரமான கோஷம், பா.ஜ.கவின் வளர்ச்சி அரசியலை கர்நாடகாவில் தவிடுபொடியாக்கியிருக்கிறது. இது 2024 தேர்தலில் பா.ஜ.கவை அசைத்துப் பார்க்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com